அண்ணா பல்கலைக்கழகத்தில் 373 காலிப்பணியிடங்களை நிரப்ப ஹைகோர்ட் காலக்கெடு

post-img

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தனது உறுப்பு நாடுகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனங்கள் நடந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதாவது கடந்த 2010-2011 ஆம் ஆண்டு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.


மாதம் ரூ 20 ஆயிரம் ஊதியம் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். இது உதவி பேராசிரியர்களின் சம்பளத்தை விட குறைவு என்றும் 20 ஆயிரம் ரூபாயை வைத்து கொண்டு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் வாழ்க்கை நடத்த முடியும். எனவே பணி வரன்முறை செய்ய வேண்டும். ஊதியத்தை உயர்த்த வேண்டும்.


அது போல் புதிதாக தாற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்றும், காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டும், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன? 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய என்ன சிக்கல் உள்ளது? தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய தயங்குவதேன்? நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க ஏன் நேரடி தேர்வு நடத்த முடியாது? எனக் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.


இவ்வளவு காலியிடங்களை வைத்துக்கொண்டு இத்தனை ஆண்டுகளாக எப்படி செயல்படுகிறது என தெரியவில்லை எனவும் குற்றம்சாட்டினர். இடைப்பட்ட 3 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன், 372 காலியிடங்களுடன் எப்படி செயல்படுகிறது என விளக்கமளிக்க பல்கலைகழக பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 5 க்கு தள்ளி வைத்தனர்.


இந்த நிலையில் புதிய தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் பணி வரன்முறை, ஊதிய உயர்வு உள்ளிட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது உறுப்பு கல்லூரிகளில் 372 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடைமுறையை அடுத்த 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும். இந்த பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இறுதித் தேர்வு பட்டியலை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related Post