நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது காதலில் விழுந்த இந்த ஜோடி, கடந்தாண்டு ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
அதன்பின்னர் இருவரும் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளும் பெற்றெடுத்தனர்.
இந்நிலையில், முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு நயனுக்கு க்யூட்டாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார் விக்கி.
நயன்தாராவுக்கு வாழ்த்து சொன்ன விக்கி:கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது இந்தியில் உருவாகும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்தப் படம் செப்டம்பரில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார் நயன். அதேநேரம் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கைநழுவிப் போன விக்னேஷ் சிவன், அடுத்த படத்துக்கு ரெடியாகி வருகிறார்.
நயன் - விக்கி இருவருமே கோலிவுட்டின் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா தான் நாயகியாக நடித்திருந்தார். அப்போது முதலே இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்தாண்டு ஜூன் மாதம் இதேநாளில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சென்னை ஈசிஆரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
மேலும், திருமணம் ஆன நான்கே மாதங்களில் வாடகை தாய் மூலம் குழந்தையும் பெற்றுக்கொண்டனர். இது மிகப்பெரிய சர்ச்சையானதால் தமிழ்நாடு அரசு தரப்பில் விசாரணையும் நடைபெற்றது. பின்னர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதற்கான ஆதாரங்களை நயன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதால் இந்த பிரச்சினையும் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு மகனுக்கு உயிர் ருத்ரேனில் என் சிவன் என்றும், மற்றொரு மகனுக்கு உலக தெய்வேக் என் சிவன் எனவும் பெயர் சூட்டினர்.
இந்நிலையில், முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு தனது இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில் நயன்தாரா குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து திருமண நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும், பல ஏற்றத் தாழ்வுகளுடன் முதல் ஆண்டை நிறைவுசெய்துள்ளோம். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது, இந்த அமைதியான குடும்பத்தை பார்த்ததும் மனம் ஆறுதல் அடைகிறது.
இந்த எனர்ஜியால் தொடர்ந்து தனது இலக்குகளை நோக்கி பாசிட்டிவாக ஓடிக்கொண்டிருக்கிறேன். எனது மகன்களுடன் அனைத்தையும் ஒன்றாக உணர்கிறேன். இந்த குடும்பமே எனக்கு பலமாக இருப்பதுடன் வாழ்க்கையையும் அழகாக மாற்றியுள்ளது. அவர்களுக்கு நான் சிறந்தவனாக இருக்க ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.
பதிவின் கடைசியில், நெகட்டிவான கமெண்ட்ஸ்கள் குறித்தும் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலாம் ஆண்டு திருமண நாளில் விக்னேஷ் சிவன் செம்ம க்யூட்டாக வாழ்த்துத் தெரிவித்துள்ளது நயன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. முன்னதாக கடந்த மாதம் அன்னையர் தினத்தை முன்னிட்டும் நயனுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்துக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நயன் - விக்கி தம்பதிகளுக்கு ரசிகர்களும் திருமண வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.