சென்னை மாநகராட்சி சார்பில் ராஜா அண்ணாமலைபுரம் வணிக வளாகம், சி.பி.ராமசாமி சாலை வணிக வளாகம், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், தியாகராயநகர் டாக்டர் நாயர் சாலை பழைய வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்தும் மையங்களை அமைக்க அரசின் அனுமதி கோரி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: "சென்னை மாநகராட்சி சார்பில் ராஜா அண்ணாமலைபுரம் வணிக வளாகம், சி.பி.ராமசாமி சாலை வணிக வளாகம், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், தியாகராயநகர் டாக்டர் நாயர் சாலை பழைய வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் ரூ.162 கோடியில் ஒருங்கிணைந்த வாகன நிறுத்தும் மையங்களை அமைக்க, அரசின் அனுமதி கோருவதற்கு மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பிராட்வே பேருந்து நிலையத்தை ரூ.300 கோடியில் பல்வகை வணிக வளாகத்துடன் கூடிய, போக்குவரத்து முனையமாக மாற்றவும், சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இருந்து 53 அம்மா குடிநீர் நிலையங்களை சென்னை குடிநீர் வாரியத்திடம் வழங்கவும், மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 1240 பணியிடங்களை ஒப்பந்த ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாநகராட்சி பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை கல்விச் சுற்றுலாவாக ஆவின், எண்ணூர் துறைமுகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், தக் ஷின சித்ரா, பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (பிர்லா கோளரங்கம்), போக்குவரத்து பூங்கா, ஹூண்டாய் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லவும், நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று,
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசுக் கல்வி நிறுவனங்களில் மட்டும் சேரும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் முதலாமாண்டு கல்விக் கட்டணத்தை மாநகராட்சி செலவில் செலுத்தவும், மாநகராட்சி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி அளிக்கும் ஆசிரியர்களை கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லவும், அவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.1500-லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கவும், மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை அமைக்கவும் தடையின்மை சான்று வழங்கப்பட்டதற்கும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது" இவ்வாறு சென்னை மாநகராட்சியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.