டெல்லி: இந்தியா - கனடா மோதல் விவகாரத்தில் நாட்டு நலனே முக்கியம் என்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் அமைப்பு காலிஸ்தான். 1984-ம் ஆண்டே காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் இருந்து துடைத்தெறியப்பட்டுவிட்டனர். ஆனால் காலிஸ்தான் சித்தாந்தம் இன்னமும் ஓயவில்லை. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என சீக்கியர்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில் மீண்டும் மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை தீவிரவாதிகள் உயிர்ப்பித்து வருகின்றனர்.
குறிப்பாக கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார். அவர் வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு:-
அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார். இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம்.
இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் கனடா - இந்தியா இடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தூதரையும் கனடா வெளியேற்றிய நிலையில், பதிலுக்கு இந்தியாவும் கனடா தூதரை வெளியேற உத்தரவிட்டுள்ளது. கனடா - இந்தியா இடையேயான மோதல் சர்வதேச அளவில் வெளிப்பட்டு வரும் நிலையில், இந்த பிரச்சினையில், நாட்டு நலனே முக்கியம் என்றும் மத்திய அரசுக்கு முழு ஆதரவை அளிப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பயங்கரவாதத்திற்கு எதிரான நமது நாட்டின் போரில் எந்த சமரசமும் கிடையாது என்பதை காங்கிரஸ் நம்புகிறது. குறிப்பாக பயங்கரவாதம் இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் போது அதில் சமரசமே கிடையாது. நமது நாட்டின் நலனே அனைத்து நேரங்களிலும் முதன்மையானதாக வைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.