நடுராத்திரியில் அழுகிய ஆண் சடலத்தால் அரண்ட ஆந்திரம்! ரூ.1.3 கோடி கேட்ட கும்பல் யார்! சிக்கிய துப்பு!

post-img
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் மின்சாதன பொருட்கள் இருப்பதாக கூறி ஒரு பெண்ணுக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்சலில் வந்த ஆண் சடலம் யாருடையது என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த சடலத்துடன் வந்த ஒரு மிரட்டல் கடிதத்தில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கிறார்கள். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏண்டகண்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகதுளசி. இவர் வீடு கட்டி வருகிறார். அதற்கு ஷத்ரிய சேவா சமிதி என்ற அமைப்பினர் உதவி வருகிறார்கள். நாகதுளசியின் விண்ணப்பத்தை ஏற்ற அந்த அமைப்பினர் அவருக்கு வீடுகட்ட தேவையான பொருட்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நாகதுளசி வீட்டுக்குத் தேவையான ஃபேன், லைட் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பார்சலில் அனுப்பியுள்ளதாக அவரிடம் போனில் அந்த அமைப்பினர் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நேற்று முன் தினம் இரவில் நாகதுளசியின் வீடு தேடி ஒரு பார்சல் வந்தது. இதில் என்ன இருக்கிறது என நாகதுளசி கேட்ட போது அந்த நபர், மின்சாதன பொருட்கள் இருப்பதாக கூறிவிட்டுச் சென்றாராம். பார்சலை பிரித்து பார்த்த போது நாக துளசி அதிர்ச்சி அடைந்தார். அதில் மின்சாதன பொருட்களுக்கு பதிலாக 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. மேலும் அங்கு ஒரு கடிதமும் இருந்தது. அதில் ரூ 1.3 கோடி கேட்டு மிரட்டப்பட்டிருந்தது. கேட்ட பணத்தை கொடுக்கத் தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அலறி அடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் நாதகதுளசி புகார் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நாகதுளசி, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய போலீஸார் அந்த ஷத்ரிய சேவா அமைப்பினரிடமும் விசாரணை நடத்தவுள்ளனர். அது போல் பார்சல் கொண்டு வந்த நபரையும் அடையாளம் காணும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த சடலம் குறித்த முதல் கட்ட விசாரணையில் அந்த நபர் இறந்து 4 முதல் 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு நாகதுளசியின் கணவர் காணாமல் போய்விட்டார். அவர் வாங்கிய 3 லட்சம் கடனை வட்டியுடன் கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் மிரட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் இறந்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த பார்சல் எங்கிருந்து வந்தது, அதை கொண்டு வந்து கொடுத்த நபர் யார் என்பதை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். நாகதுளசியின் கணவர் யாரிடம் கடன் வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இதை முக்கிய துப்பாக போலீஸார் கருதுகிறார்கள். அழுகிய நிலையில் சடலம் வந்த பார்சலை வீட்டிற்குள் வைத்திருந்ததால் ஏதாவது நோய்த் தொற்று அபாயம் ஏற்படும் என்பதால் அந்த வீட்டை சுத்தப்படுத்தும் பணியும் நடைபெறுகிறது.

Related Post