"இந்த" வம்பில் மாட்டாதீங்க! காலம் முழுக்க கடன்தான் கட்டணும்! ஆனந்த் சீனிவாசன்

post-img

சென்னை: முக்கிய பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான ஆனந்த் சீனிவாசன், இப்போது இளம் தலைமுறையினர் எளிதாக மாட்டிக் கொள்ளும் ஒரு விஷயம் குறித்து விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன். பொருளாதாரம் என்றாலே இங்குப் பலரும் அஞ்சி ஓடும் நிலையில், அதை எளிமையாக அனைவருக்கும் புரியும்படி விளக்குவதே இவரது ஸ்பெஷாலிட்டி.
இவர் சொல்வது அடிப்படையில் இரண்டே விஷயங்கள் தான். ஒன்று வரும் சம்பளத்தில் ஒரு பகுதியைச் சேர்த்து வைத்துச் சரியாக முதலீடு செய்ய வேண்டும். அடுத்து கடனை வாங்கவே கூடாது. இந்த இரண்டையும் பாலோ செய்தால் போதும்.
ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே அவர் தனது சமீபத்திய வீடியோவில் இப்போது இளம் தலைமுறையினர் எளிதாக மாட்டிக் கொள்ளும் ஒரு விஷயம் குறித்து விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "வெளிநாட்டிற்குச் சென்று படித்தால் வாழ்க்கை மொத்தமாக மாறிவிடும் என்ற தவறான எண்ணமே இதற்குக் காரணம். அப்படிதான் பல நூறு பேர் கனடா சென்றார்கள். இப்போது பாருங்க அவர்களால் திரும்பியே வர முடியாது. வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் போது இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம்.


இரண்டாவது வாழ்க்கையில் நல்ல நிலைக்குச் செல்ல வெளிநாடுகளுக்கு எல்லாம் செல்ல தேவையில்லை. இங்கே படித்து நல்ல நிலையில் இருந்தாலே போதும். அமெரிக்காவில் வேலை செய்யும் நபர் மற்றும் இங்கே சரியாகப் படித்துச் சரியாக முதலீடு செய்யும் நபரின் வாழ்க்கைத் தரத்தை ஒப்பீட்டு பார்த்தால் உங்களுக்கே புரியும். இங்கே இருப்பவரின் வாழ்க்கை எவ்வளவு மேல் என சொல்லலாம்.
ஒரு கிராம் தங்கம் ரூ.10,000க்கு போகும்.. மெகா மேட்டரை சொல்லும் ஆனந்த் சீனிவாசன்! எப்போது தெரியுமா
20 லட்சம் கடன்: நான் வருத்தத்துடன் ஒன்றைச் சொல்கிறேன்.. சமீபத்தில் நான் ஓமன் சென்றிருந்தேன். அப்போது விமானத்தில் என்னுடன் இளம்பெண் ஒருவர் வந்திருந்தார். அவரது தந்தை லாரி ஓனராம். நான் சவுதி சென்ற நிலையில், அந்த பெண் ஓன் வழியாக லண்டன் சென்றார். லண்டனில் படிக்க அந்த பெண் 20 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அங்குச் சென்று பிசியோதெரபி படிக்கிறார்.
இப்படிச் செய்தால் பிறகு வாழ்க்கை முழுக்க கடனை மட்டுமே அடைக்க வேண்டி இருக்கும். எனவே, கடன் வாங்கி அமெரிக்கா, லண்டன், கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்குச் சென்று படிக்க வேண்டாம். அங்கெல்லாம் போனால் தான் வாழ்க்கை மாறும் என்று இல்லை.
கால் டாக்ஸி ஓட்டுகிறார்: இப்படிதான் நான் பார்த்த ஒருவர் ஆஸ்திரேலியாவில் கம்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு கால் டாக்ஸி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார். கேட்டால் பிஸ்னஸாம்.. அங்குப் போய் கால் டாக்ஸி ஓட்டுவதற்குப் பதிலாக இங்கேயே செலவு செய்யலாம் கால் டாக்ஸி ஓட்டலாமே. கால் டாக்ஸி ஓட்ட எதற்கு ஆஸ்திரேலியா சென்று 20 லட்ச ரூபாய் கொடுத்துப் படிக்க வேண்டும்.
இதை எல்லாம் நான் வருத்தத்துடனேயே சொல்கிறேன். சினிமா பாடங்களில் லண்டனில் இருக்கும் ஆடம்பர இடங்களை எல்லாம் காட்டுகிறார்கள். அதைப் பார்த்து நாம் வெளிநாட்டிற்குச் சென்று படித்தால் வாழ்க்கையே மாறிவிடும் என நம்பி வெளிநாடுகளுக்குச் சென்று அந்த பொறியில் மாட்டிக் கொள்கிறார்கள்.
இந்த தப்பை செய்யாதீங்க: இப்படி வெளிநாட்டிற்குச் சென்றே தீர வேண்டும் என்று இருப்பவர்களுக்குக் கடன் கொடுக்க பல நிறுவனங்கள் உள்ளனர். அந்தளவுக்கு நமது நாட்டில் வெளிநாட்டுப் படிப்புகள் மீது மோகம் இருக்கிறது. ஆனாலும் கடன் வாங்கி வெளிநாடுகளுக்குச் சென்று படித்தால் காலம் முழுக்க அந்த கடனையே கட்ட வேண்டும்" என்று அவர் எச்சரிக்கை கொடுத்தார்.
அது எப்படி: இதில் ஆனந்த் சீனிவாசன் அமெரிக்காவுக்கு உள்ளவர்களைக் காட்டிலும் இங்கே சரியாகப் படித்து சரியாக முதலீடு செய்யும் நபரின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும் எனக் கூறியிருந்தார். அமெரிக்காவில் சம்பளமே அதிகமாக இருக்கும். அப்படியிருக்கும் போது எப்படி இங்கே வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம்.
ஆனாலும், அங்கே சம்பளத்திற்கு ஏற்ப செலவுகளும் கூட ரொம்பவே அதிகம். இதனால் நாம் வாங்கும் சம்பளத்தில் பெரும்பகுதி செலவுக்கே சென்றுவிடும். அதைக் குறிப்பிட்டே அவர் அப்படி கூறியிருக்கிறார்.

Related Post