சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற திவ்ய பாசுரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள், இந்த வதந்திகளை ரசிகர்களும் மக்களும் நம்ப வேண்டாம் என விளக்கமளித்துள்ளார் இளையராஜா.
மார்கழி மாதம் தொடங்கி இருக்கும் முன்னிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்கள் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சியும், நாட்டியஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா கலந்து கொண்டார். தொடர்ந்து அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு முன்னதாக ஜீர்கள் கோவிலின் கருவறைக்கு அருகே பெருமாளை ஆண்டாள் தரிசித்ததாக கூறப்படும் அர்த்த மண்டபத்துக்கு சென்றனர்.
அப்போது அவர்களுடன் இளையராஜாவும் உள்ளே சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்க வேண்டும் என கூறினர். தொடர்ந்து வெளியே நின்ற இளையராஜா அங்கிருந்தபடி வழிபாடு செய்தார். இதை அடுத்து இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. தீண்டாமையின் உச்சமாக இளையராஜாவை வெளியே நிற்க வைத்ததாக சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் தொடர்பாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்து இருக்கிறது. அர்த்த மண்டபத்திற்குள் உற்சவர் சிலைகள் இருப்பதால் ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை எனவும், இளையராஜாவை கட்டாயப்படுத்தவில்லை. ஜீயர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரே தான் வெளியே சென்றார் என கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. இதை அடுத்து கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் விவாதம் நடைபெற்று வருகிறது.
மேலும் இளையராஜா விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையும் விளக்கம் அளித்தது. இளையராஜா அவமதிக்கப்படவே இல்லை எனவும், ஆண்டாள் கோவிலின் கருவறைக்கு அருகே அர்த்தமண்டபத்தில் அர்ச்சகர்கள், ஜீயர்கள் மட்டுமே அனுமதி எனவும், விதிமுறைகள் படியே இளையராஜாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள், இந்த வதந்திகளை ரசிகர்களும் மக்களும் நம்ப வேண்டாம் என விளக்கமளித்துள்ளார் இளையராஜா. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,”என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.” என பதிவிட்டுள்ளார்.
ஆண்டாள் கோவிலில் இளையராஜாவை அவமதித்ததாக புகார் எழுந்த நிலையில் திரைத் துறையினர் அரசியல் கட்சியினர் என பேதமின்றி அனைவரும் இளையராஜாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இளையராஜாவோ அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்ற ரீதியில் விளக்கம் அளித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்கின்றனர் நெட்டிசன்கள்..