சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரத்தில் நேற்று முன்தினம் திடீரென பலருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். அங்கு விநியோகிக்கப்பட்ட குடிநீருடன் கழிவுநீர் கலந்ததே இதற்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறிய நிலையில், அதை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மறுத்திருந்தார். இதற்கிடையே அங்கு இன்று ஆய்வு செய்த தாம்பரம் கமிஷனர் பாலச்சந்தர் ஆய்வின் போது அங்கு சப்ளை செய்யப்பட்ட தண்ணீரைக் குடித்து சோதனை செய்தார்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் அடுத்துள்ள மலைமேடு பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 30 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
குடிநீரில் கழிவுநீர்: அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் வரை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு விநியோகிக்கப்பட்ட தண்ணீரில் கழிவுநீர் கலந்ததாகவும் இதன் காரணமாகவே மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் கூறினர். இதையடுத்து அங்குத் தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டது.
அமைச்சர் தா. மோ அன்பரசனும் அப்பகுதிக்கு விரைந்தார். அங்கு ஆய்வு செய்த அவர், தண்ணீரில் கழிவுநீர் கலந்ததாகத் தெரியவில்லை என்றும் அப்படி நடந்து இருந்தால் இப்பகுதியில் உள்ள அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், இப்பகுதி மக்கள் சாப்பிட்ட உணவு காரணமாகவே புட் பாய்சனிங் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இங்குள்ள ஏரியில் இருந்து மீன்களைப் பிடித்துச் சாப்பிட்டுள்ளனர் என்றும் இதனால் கூட பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
தண்ணீரைக் குடித்து சோதனை: இதற்கிடையே தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் அந்த பகுதிகளில் சோதனை செய்தார். அங்கு மருத்துவ முகாம்கள் நடந்த நிலையில், அங்கும் ஆணையர் பாலச்சந்தர் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களுக்குத் தேவையான மருத்துவ பொருட்களையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து அங்கு மெட்ரோ நீர் அவரது முன்னிலையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த நீரை அவர் குடிக்கவும் செய்தார். இது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
முன்னதாக குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக எழுந்த புகார் தொடர்பாகத் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார். அதில் அவர், "கடந்த சனிக்கிழமை தான் கடைசியாகத் தாம்பரம் 13வது வார்டு காமராஜ் நகரில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அதன் பிறகு குடிநீர் சப்ளை எதுவும் நடக்கவில்லை..
விளக்கம்: கண்ணபிரான் கோவில் தெரு அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்தே தண்ணீர் சப்ளை நடந்துள்ளது. அதுவும் கூட கண்டோன்மெண்ட் பகுதிக்குத் தண்ணீர் சப்ளை நடக்கவில்லை. இதனால் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். குடிநீரில் கழிவுநீர் கலந்ததா என்பது சோதனையில் தெரிய வரும். இருந்த போதிலும், குடிநீர் விநியோக தொட்டிகளைச் சுத்திகரிக்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். சுத்திகரிப்பு பணிகள் முடிந்த பிறகு மீண்டும் தண்ணீர் சப்ளை செய்யப்படும்" என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Weather Data Source: Wettervorhersage 21 tage