மதுரை: மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு 2019-2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் முறைகேடு செய்த புகாரில் 3 சிறைத்துறை அதிகாரிகள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் கடந்த 2019 ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பொருட்கள் வாங்கியதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
அதாவதுமதுரை மத்திய சிறையில் கைதிகள் எழுதுபொருட்கள் உள்ளிட்ட சில முக்கிய பொருட்களை தயாரித்து வருகின்றனர். இதற்கான மூலப்பொருட்கள் வெளியில் இருந்து வாங்கப்படுகிறது. அதேபோல் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் அரசு துறைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதில் பொருட்கள் கொள்முதலை பொருத்தவரை சந்தை விலையை விட அதிகமாகவும், கைதிகள் தயாரித்த பொருட்களின் விலையில் மாற்றம் செய்தும் போலி பில்கள் தயாரித்து முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை செய்தனர். அப்போது முறைகேடுக்கான முகாந்திரம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மதுரை சிறையில் பணியாற்றி தற்போது பிற சிறையில் பொறுப்பில் உள்ள 2 அதிகாரிகள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி மதுரை சிறையின் முன்னாள் சூப்பிரண்டு ஊர்மிளா (இப்போது கடலூர் சிறை சூப்பிரண்டு), முன்னாள் ஜெயிலர் வசந்தா கண்ணன் (இப்போது பாளையம்கோட்டை சிறையின் கூடுதல் சூப்பிரண்டு), மாஜி அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபசிர் தியாகராஜன் (இப்போது வேலூர் சிறை அட்மினிஷ்ஸ்ட்ரேட்டிவ் ஆபிசர்) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தனிநபர்களான மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்தவர்களான ஜாபர் உல்லாகான், முகமது அன்சாரி, சென்னை மண்ணடியை சேர்ந்த முகமது அலி, சென்னை கொடிங்கையூரை சேர்ந்தவர்களான சீனிவாசன், சாந்தி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர்களான சங்கரசுப்பு, தனலட்சுமி, சென்னை நொளம்பூரை சேர்ந்த வெங்கடேஸ்வரி உள்ளிட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.