ரோட்டில் திரியும் மாடுகள்.. இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீங்க? அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி!

post-img
சென்னை: தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பல அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. சாலைகளில் மாடுகள் சண்டை போடும்போது வாகனங்கள் வந்தால் குறுக்கே சென்று விபத்துகளுக்கு காரணமாகின்றன. மாடுகள் குறுக்கே வந்ததால் விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகியுள்ளன. மேலும், மாடுகள், நடந்து செல்வோரை முட்டி வீசும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு பள்ளிச் சிறுமி ஒருவரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. மாடுகளின் கால்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட சிறுமியை, இரண்டு மாடுகள் கடுமையாக தாக்கின. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை திருவேற்காடு பகுதியில், கருமாரி அம்மன் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் சென்னை நகரை இணைக்கும் முக்கிய சாலைகளும் இப்பகுதியில் உள்ளன. இந்த சாலைகளில், மாடுகள் கட்டுப்பாடுகள் இன்றி சுற்றித் திரிவதால் அதிகமான விபத்துகள் ஏற்படுவதாகவும், சாலையில் செல்லும் பொதுமக்களை மாடுகள் முட்டி பலர் காயமடைந்திருப்பதாககூறி வழக்கறிஞர் காமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் திருவேற்காடு பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர், எம். சுதீர்குமார் அமர்வு, தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து கால்நடை துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Related Post