நாம பிச்சை எடுக்கோம்! ஆனா இந்தியா நிலவுக்கே போய்ட்டாங்க!

post-img

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உலக நாடுகளிடம் நிதி கேட்டு பிச்சை எடுக்கும் அதேவேளையில் இந்தியா நிலவில் கால்பதித்துள்ளதோடு, ஜி20 மாநாட்டை நடத்தி முடித்துள்ளது என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கொதித்துள்ளதோடு இதற்கு முக்கிய காரணம் என 4 பேரை குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பி உள்ளார். அதே வேளையில் வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் நடந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்து இந்தியாவை பெருமைப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.


பாகிஸ்தானில் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் செயல்பட்டு வந்த நிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவர் கடந்த ஆண்டு தோல்வியடைந்தார். இதையடுத்து பிஎம்எல்-என் (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் ) கட்சியின் தலைவராக உள்ள ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.


ஷெபாஸ் ஷெரீப் என்பவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஆவார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்தார். பாகிஸ்தானில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, அரசியல் காரணங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.


இந்நிலையில் தான் தற்போது ஷெபாஸ் ஷெரீப்பின் அண்ணனும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் தனது கட்சியினர் மத்தியில் பேசினார். நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமாக இருந்த காலத்தில் பல்வேறு ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பனாமா வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் தான் உடல்நலனை காரணம் காட்டி சிகிச்சைக்காக லண்டர் செல்ல அவருக்கு லாகூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த 2019 ல் லண்டன் சென்ற நிலையில் அங்கேயே தங்கினார். 4 வாரம் மட்டுமே அவருக்கு லண்டன் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பவே இல்லை. இந்நிலையில் தான் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமரான நிலையில் அவர் நாடு திரும்புவார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் அது நடக்கவில்லை.

 

இந்நிலையில் தான் பிஎம்எல்-என் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பாகிஸ்தானில் நடந்தது. இந்த கூட்டத்தில் லண்டனில் இருந்த படி ஆன்லைன் மூலம் நவாஸ் ஷெரீப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் ‛‛இன்று பாகிஸ்தான் பிரதமர் நாட்டுக்கான நிதி உதவிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று பிச்சை எடுத்து வருகிறது. ஆனால் இந்தியா நிலவுக்கு சென்றுவிட்டது. ஜி20 உச்சி மாநாட்டை நடத்தி முடித்துள்ளது.


அண்டை நாடான இந்தியாவால் இத்தகைய சாதனைகளை செய்ய முடியும் எனும் போதும் பாகிஸ்தானால் ஏன் முடியவில்லை. இதற்கு யார் பொறுப்பு?. 1990ல் நாம் பொருளாதார சீர்த்திருத்தம் செய்தோம். அதை பார்த்து தான் இந்தியாவும் பொருளாதாரத்தில் சீர்த்திருத்தம் கொண்டு வந்தது.


இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் பொறுப்பேற்றபோது ஒரு பில்லியன் டாலர் என்பது தான் அந்நிய செலாவணியாக இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 600 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இப்போது இந்தியா எங்கேயோ போய்விட்டது. ஆனால் பாகிஸ்தான் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது.


என்னை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா,ஐஎஸ்ஐ (உளவுபிரிவு) மாஜி தலைவர் ஜெனரல் ஃபைஸ் ஹமீது ஆகியோர் தான் காரணம். இவர்கள் முன்னாள் தலைமை நீதிபதிகள் சாகிப் நிசார் மற்றும் ஆசிப் சயீத் கோசா ஆகியோரை கருவிகளாக பயன்படுத்தி கொண்டனர்.


இவர்கள் செய்தது என்பது கொலையை விட கொடிய குற்றமாகும். இவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது என்பது நாட்டுக்கு செய்யும் அநீதியாகும். இவர்கள் மன்னிப்புக்கு தகுதியானவர்களே கிடையாது. அதோடு நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு இவர்கள் தான் காரணம். இதற்கான பொறுப்பை அவர்கள் ஏற்றே ஆக வேண்டும்'' என ஆக்ரோஷமாக தெரிவித்தார்.


முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போதும் அங்கு பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இருப்பினும் கடந்த ஜூலை மாதம் ஐஎம்எப் எனும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் வாங்கிய நிலையில் தற்போது அங்கு நிலைமை ஓரளவு பரவாயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Post