திருச்சி: மதுரையில் அமைக்கப்பட்டதை போலவே, திருச்சியிலும் சர்வதேச தரத்தில் நூலகம் ஒன்று அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கி உத்தரவிட்டிருக்கிறார்.
இது தொடர்பான உத்தரவில் "காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், செங்குளம் கிராமம், பிளாக்-12, நகரளவை எண். 4 மற்றும் திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், கோ.அபிஷேகபுரம் கிராமம் நகரளவை எண்.60 & 61 & 1.85.17 ஹெக்டேர் இடத்தில் 18333 சதுர மீட்டர் (1,97,337 சதுரடி) (G+7) அளவில் ரூ.235.00 கோடி திட்ட மதிப்பீட்டில் (ரூபாய் இருநூற்று முப்பத்து ஐந்து கோடி மட்டும்) நூலகக் கட்டடம் கட்டுவதற்கு பொதுப் பணித்துறையிடமிருந்து விரிவான திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம் பெறப்பட்டுள்ளது எனவும், இந்நூலகத்திற்குத் தேவையான நூல்கள் மற்றும் மின்நூல்கள் ரூ.50.00 கோடி மதிப்பிலும் (ரூபாய் ஐம்பது கோடி மட்டும் )மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் ரூ.5.00 கோடி மதிப்பிலும் (ரூபாய் ஐந்து கோடி மட்டும்) ஆகமொத்தம் ரூ.290.00 கோடி மதிப்பில் (ரூபாய் இருநூற்று தொண்ணூறு கோடி மட்டும் ) திருச்சிராப்பள்ளியில் மாபெரும் நூலகம் அமைப்பதற்கு தமிழ்நாடு நிதிக் குறியீடு (T.N.F.C Art.99) விதி.99-ன்படி முன்பணம் பெற்று செலவினம் மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்குமாறு பொது நூலக இயக்குநர் கோரியுள்ளார்.
முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, பொது நூலக இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்த அரசு, அதனை ஏற்று, இவ்வாணையின் இணைப்பில் கண்டுள்ளவாறு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், செங்குளம் கிராமம், பிளாக்-12, நகரளவை எண்.4 மற்றும் திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், கோ.அபிஷேகபுரம் கிராமம் நகரளவை எண்.60 & 61 என்ற 1.85.17 ஹெக்டேர் இடத்தில் 18333 சதுர மீட்டர் (1,97,337 சதுரடி) (G+7) அளவில் ரூ.290,00,00,000/- (ரூபாய் இருநூற்று தொண்ணூறு கோடி மட்டும்) திட்ட மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கலாம் என முடிவு செய்து, நிர்வாக அனுமதி் மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது.
மானியக் கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறும் வகையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பத்தை எதிர்பாரா செலவின நிதி விதிகள் 1963-ல் உள்ள அட்டவணை A படிவத்துடன் இவ்வரசாணையின் நகலுடன் இணைத்து நிதித் (வரவு செலவு பொது 1) துறைக்கு நேரடியாக அனுப்பிவைக்குமாறு பொது நூலக இயக்குநர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
மேலும், இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை 2024-2025-ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகள் / திருத்த மதிப்பீடு / இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதித் (வரவு செலவு பொது-1 / கல்வி-II) துறைக்கு அனுப்பிவைக்குமாறும் பொது நூலக இயக்குநர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
மேற்கண்ட புதிய கணக்குத் தலைப்பிற்கு இயக்குநர், பொது நூலக இயக்ககம் அவர்கள் மதிப்பீடு, கணக்கு நேரமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் ஆவார். சம்மந்தப்பட்ட சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள் மற்றும் கருவூல அலுவலர்கள் தங்கள் கணக்குகளில் மேற்கண்ட புதிய கணக்குத் தலைப்புகளைத் திறக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்புக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளார். அதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர், சட்டமன்றப் பேரவையில் 'காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்' என அறிவித்திருந்தார்.
அதனை செயல்படுத்தும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதலமைச்சர் அரசாணையின் மூலம் வழங்கியுள்ளார்.
திருச்சி மாவட்ட மக்களின் சார்பாகவும், டெல்டா மாவட்ட இளைஞர்கள், வாசகர்கள், எழுத்தாளர்களின் சார்பாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.