குவைத்: பிரதமர் மோடி இப்போது குவைத் நாட்டிற்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் குவைத் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்கிடையே குவைத் நாட்டின் மிகவும் உயர்ந்த விருதான 'தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ விருது இப்போது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். பல லட்சம் இந்தியர்கள் அங்கு ஆண்டுக் கணக்கில் கூட தங்கி வேலை செய்து வருகிறார்கள்.
குவைத்தில் இந்தியர்கள்:
மத்திய கிழக்கு நாடுகளான ஐக்கிய அமீரகம், சவுதி, ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்குப் பிரதமர் மோடி ஏற்கனவே பல முறை சென்றுள்ளார். ஆனால், அங்குள்ள குவைத் நாட்டிற்கு மட்டும் இதுவரை மோடி சென்றதே இல்லை. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் குவைத்தில் கணிசமான அளவுக்கு இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதாவது அந்நாட்டின் மக்கள் தொகை 43 லட்சமாக இருக்கும் நிலையில், அதில் சுமார் 10 லட்சம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இந்தளவுக்கு இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் நாடாக இருந்தாலும் பிரதமர் மோடி இதுவரை குவைத் நாட்டிற்குச் சென்றதே இல்லை. கடந்த 2022ம் ஆண்டு மோடி குவைத் செல்வதாக இருந்தது. அதற்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
பிரதமர் மோடி குவைத் பயணம்:
இந்தச் சூழலில் கடந்த செப். மாதம் நடந்த ஐநா கூட்டத்தில் பிரதமர் மோடியை குவைத் இளவரசர் ஷேக் சபா காலித் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு குவைத் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அலி அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அப்போது பிரதமர் மோடியைச் சந்தித்த அவர், தங்கள் நாட்டிற்கு வருமாறு மோடியிடம் அழைப்பு விடுத்தார். பிரமர் மோடிக்கு அழைப்பு விடுத்து குவைத் பிரதமர் முகமது சபா அல் சலேமின் எழுதிய கடிதமும் அளிக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இப்போது குவைத் நாட்டிற்குச் சென்றுள்ளார். இரண்டு நாள் பணமாக குவைத் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டின் துணைப் பிரதமர் ஷேக் பகாத் யூசுப் விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார். மேலும், பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் பிரம்மாண்ட வரவேற்பைக் கொடுத்தனர். கடந்த 1981ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சென்றார். அதன் பிறகு எந்தவொரு பிரதமரும் குவைத் சென்றதே இல்லை. இதற்கிடையே சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இப்போது குவைத் சென்று இருக்கிறார்.
பிரதமர் மோடிக்கு குவைத் விருது:
இதற்கிடையே குவைத்தின் உயரிய விருதான 'தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ விருது இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. உலக நாடுகள் பிரதமர் மோடிக்கு வழங்கும் 20வது விருது இதுவாகும். கடந்த மாதம், பிரதமர் மோடி கயானாவுக்கு சென்ற போது, அந்நாட்டின் மிக உயரிய தேசிய விருதான 'தி ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இப்படி பல்வேறு நாடுகளும் பிரதமர் மோடிக்கு விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இந்த பயணத்தில் குவைத் எமிர் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபருடன் சந்தித்துப் பேசினார். அதில் இரு நாட்டு உறவு, ஒத்துழைப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிகிறது.