திருவண்ணாமலை: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை சில நாட்களுக்கு முன்பு திறந்துவிடப்பட்டதில் கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஃபெஞ்சல் புயல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மரக்காணம் அருகே கரையை கடந்தது. வழக்கமாக புயல் கரையை கடந்து விட்டால் மழையின் தீவிரம் ஓரளவுக்கு குறைந்துவிடும். ஏனெினல் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அரபிக்கடலை நோக்கி சென்றுவிடும். ஆனால் ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து, வலுவிழந்து வழக்கமான வேகத்தில் நகராமல் மிக மெதுவாக நகர்ந்தது. இதனால் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக இருந்தது. சில இடங்களில் 50 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியிருந்தது. கனமழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பின. திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையும் வேகமாக நிரம்பியிருந்தது. இதனால் உபரி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
அதாவது டிச.1ம் தேதி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5000 கன அடியாக இருந்தது. ஆனால் இந்த அளவு வேகமாக அதிகரித்து 1 லட்சம் கனஅடியாக உயர்ந்தது. அடுத்த நாள் நீர் வரத்து 1.68 லட்சம் கனஅடியாக உயரவே, உடனடியாக அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது. திறந்து விடப்பட்ட நீரின் அளவு அதிகரித்து, அணைக்கு வந்த அனைத்து நீருமே அப்படி வெளியேற்றப்பட்டது. இதனால் ஆற்றின் கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மழை, நீர் வரத்து, அணையின் கொள்ளளவு உள்ளிட்டவை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். இருப்பினும், மொத்த நீரையும் ஒரே நேரத்தில் திறந்து விட்டு வெள்ளத்தை ஏற்படுத்திவிட்டனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கு விளக்கமளித்த அரசு, திருவண்ணாமலையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழைதான் வெள்ளத்திற்கு காரணம் என்று கூறியிருந்தது.
இந்த பிரச்னை ஓரளவு ஓய்ந்திருக்கும் நிலையில் மீண்டும் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டிருக்கிறது. தற்போது அணைக்கு விநாடிக்கு 2,500 கனஅடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. எனவே அணையின் நீர் மட்டம் 117.45 அடியாக உயர்ந்திருக்கிறது. மொத்த கொள்ளளவாக 119 அடி இருக்கும் நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.