கலைஞர் கனவு இல்லம்.. ஒரு லட்சம் பேருக்கு 350000 தரும் அரசு.. தகுதிகள், விண்ணப்பம் பற்றி முழு விவரம்

post-img
கலைஞரின் கனவு இல்லம்: தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தமிழ்நாட்டிற்கான 2024-25ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். இந்த திட்டம் எப்படி என்றால், 'குடிசையில்லா தமிழ்நாடு' என்ற இலக்கினை எய்திடும் வகையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்கு தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக, 2024-25 ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது இந்த திட்டப்படி தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக ஆர்.சி.சி.கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே நோக்கம் ஆகும். பட்ஜெட் அறிவிப்புக்கு பின்னர் ஊரக வளர்ச்சித்துறை இதற்கான அரசாணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் தேர்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிதியாண்டு கட்டப்படும் ஒரு லட்சம் வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வுசெய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வீடு கட்ட தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு, சமையலறை உட்பட, 360 சதுர அடி என்பதால் பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் TANCEM சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, துறை மூலம் அரசால் வழங்கப்படுகிறது. வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (Single Nodal Account-SNA) மூலம் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாடு அரசால் ரூ.1051.34 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.860.31 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும், துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு (Steel) என ரூ.135.30 கோடி வழங்கப்பட்டிருக்கிறது என்றும் ஆக மொத்தம் ரூ.995.61 கோடி இதுவரை கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு ஒரு அறிவிப்பில் கூறியுள்ளது, வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.400 கோடி விடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இப்போது வரப்பெற்றுள்ள ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு கூறியுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.3,50,000 ஆகும். இந்த தொகைக்கு ஏற்ப கட்டுமான பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் கட்டுமான பணிகளும் செய்யப்படுகிறது. அதேநேரம் யாராவது தங்களது வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய விரும்பினால் ரூ.1.50 லட்சம் வரை கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. கலைஞர் கனவு இல்லத்தில் கட்டித்தரப்படும் வீடுகள் அனைத்தும் 360 சதுரஅடி அளவில் சமையலறையுடன் இருக்கும். இதில் 300 சதுரஅடி கான்கிரீட் (ஆர்சிசி) கூரையுடனும், எஞ்சிய 60 சதுரஅடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாகவும, பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைக்கப்படுகிறது. அதேநேரம் இந்த வீடுகளில் ஓலை, ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்கப்படாது. . வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்படும். கூடுதல் வசதிகள் வேண்டும் என்றால் ரூ.1.50 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுவதால் அதனை வைத்து வீட்டில் வசதிகளை அதிகரித்துக் கொள்ள முடியும். ஏற்கனவே மாநில அரசால் நடத்தப்பட்டுள்ள கலைஞர் வீடு வழங்கும் திட்ட மறுகணக்கெடுப்பு, புதிய குடிசைகள் கணக்கெடுப்பு மற்றும் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு ஆகியவற்றில் இடம்பெற்று தொடர்ந்து குடிசை வீட்டில் வாழ்ந்து வருபவர்கள் இத்திட்டத்தில்பயனாளியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் இருக்க வேண்டும். சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுதியானவர்கள். சொந்தமாக கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்கள் தகுதியற்றவர்கள். குடிசையில் ஒருபகுதி கான்கீரிட், ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட்டு இருந்தால் தகுதி பெறமுடியாது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அடங்கிய குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் அலகுத் தொகை ரூ.3,50,000/- (ரூபாய் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) ஆகும். மேலும் மூன்று நிலைகளில் ஒற்றை சாரள கணக்கு மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஏற்கனவே அரசால் கணக்கெடுப்பிலும்மேற்கொள்ளப்பட்ட மூன்று வகை விடுபட்ட குடிசையில் வசிப்பவர்கள் இத்திட்டத்தின்கீழ் வீடு வழங்கிடக் கோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அவர்களது விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் மாவட்டத்திற்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Related Post