டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியை வழக்கம் போல கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆட்சிக் கால ஒடுக்குமுறைகளைப் பட்டியலிட்டு விவரித்ததால் காங்கிரஸ் எம்பிக்கள் அதிர்ந்து போயினர்.
நாட்டின் அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அரசியல் அமைப்புச் சட்டம் மீது விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் ஏற்கனவே விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, பாகிஸ்தான் என்ற நாட்டை இரண்டாக பிரித்து வங்கதேசம் என்ற தனிநாட்டை உருவாக்கியவர் இந்திரா காந்தி அம்மையார். ஆனால் அந்த வங்கதேசம் இன்று இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் நிலைமை உருவாகி உள்ளது என சுட்டிக்காட்டினார்.
ராஜ்யசபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நாடு விடுதலை அடைந்த் பின்னர் 1949-ம் ஆண்டு மஜ்ரூ சுல்தான்புரி, பால்ராஜ் ஷானி ஆகியோர் தொழிலாளர் போராட்டங்களை ஒருங்கிணைத்ததற்காக சிறையிலடைக்கப்பட்டனர். இருவருமே ஜவஹர்லால் நேருவின் நள்ளிரவு சுதந்திர தின உரையை விமர்சித்தவர்கள். ஆனால் அந்த இருவருமே நேருவிடம் மன்னிப்பு கேட்க மறுத்து சிறைவாசத்தை அனுபவித்தனர்.
"NEHRU" என்ற மிக்கேல் எட்வர்ட்ஸ் எழுதிய புத்தகத்தை 1975-ம் ஆண்டு தடை செய்தவர் நேருவின் மகள் இந்திரா காந்தி. அதேபோல இந்திரா காந்தி , அவரது மகன் குறித்து கேள்விகளை எழுப்பிய Kissa Kursi Ka திரைப்படத்தையும் இந்திரா காந்தி தடை செய்தார். நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி என ஒட்டுமொத்த குடும்பமும் தங்களது குடும்ப நலனுக்காகவே அரசியல் சாசனங்களை திருத்தினார்களே தவிர ஜனநாயகத்தை வலுத்தப்படுத்த அல்ல.
1986-ல் உச்சநீதிமன்றம் ஷாபானு ஜீவனாம்ச வழக்கில் தீர்ப்பளித்தது. ஆனால் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசோ, சிறுபான்மையினர் வாக்குகளுக்காக இஸ்லாமிய பெண்களின் உரிமையை பறிக்கும் சட்டம் கொண்டு வந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் முத்தலாக் சட்டவிரோதம் என சட்டம் கொண்டு வந்தது.
நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டது. லோக்சபாவில் ராஜீவ் காந்திக்கு 426 எம்பிக்கள் இருந்தனர்; ராஜ்யசபாவில் 156 எம்பிக்கல் இருந்தனர். ஆனால் அந்த ராஜீவ் காந்தியால் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை கொண்டுவர முடியவில்லை. அவர்கள் எப்போதும் பெண்களுக்கு எதிரானவர்கல்தான்.
நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் இந்திரா காந்தியின் மிசா (எமர்ஜென்சி) (அவசரநிலை) காலத்து கொடுமைகளை நினைவூட்டும் வகையில் தங்களது குழந்தைகளுக்கு மிசா என பெயர் வைத்தனர் (லாலு பிரசாத் யாதவின் மகள் பெயர் மிசா பாரதி). ஆனால் தற்போது அதைப்பற்றி எல்லாம் கவலையே படாமல் காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டணி வைத்துள்ளனர். இவ்வாறு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.