சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 6 மணி நேரத்தில் 5 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
சென்னை சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் நீர் வரத்து உயரத் தொடங்கி உள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர் வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கமழை பெய்யும்போதெல்லாம், செம்பரம்பாக்கம் ஏரி தீவிரமாக கண்காணிக்கப்படும். இதற்கு காரணம் இந்த ஏரியில் நீர் நிறைந்தால் இங்கிருந்து வெளியேறும் நீர் சென்னையை சின்னாபின்னமாக்கிவிடும்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் திருநீர்மலை, குன்றத்தூர், திருமுடிவாக்கம், மணப்பாக்கம் வழியாக பயணித்து, ராமாபுரம், நந்தம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரம் சென்றடைகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு நீர் வெளியேறினால், சென்னையின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது.
செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 46 மி.மீ மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி. அதில் தற்போது நீர் இருப்பு 21.18 அடியாக உள்ளது. 22 அடியை வேகமாக நெருங்கி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3,645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது தண்ணீரின் அளவு 2,903 டிஎம்சி ஆக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலையில் நீர்வரத்து 713 கன அடியாக இருந்தது. தற்போது நீர்வரத்து 3900 கன அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டவுள்ள நிலையில், 22 அடியை எட்டிய பிறகு கூடுதல் தண்ணீர் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் இன்றே 22 அடியை எட்டக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இதேபோல, சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. 119 அடி கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.50 அடியை எட்டி உள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு 2,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.