நெதன்யாகுவுக்கு எதிராக பிடிவாரண்ட்: இஸ்ரேலின் முயற்சிகளுக்கு இது எவ்வளவு பெரிய அடி?

post-img


இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு, பல முக்கிய இஸ்ரேலிய தலைவர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.
அதேசமயம், ஹமாஸ், பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகள் மற்றும் காஸாவின் பொதுமக்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
"நீதி மற்றும் மனிதநேயத்துக்கு ஓர் இருண்ட நாள். ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்குப் பதிலாக இந்த முடிவு, பயங்கரவாதம் மற்றும் தீமையின் பக்கம் சென்றுள்ளது" என்று  இந்த அறிவிப்பு குறித்து இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் குறிப்பிட்டார்.
இதனை "ஒரு யூத விரோத முடிவு" என்று அழைத்துள்ளது, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம். "இஸ்ரேல் இந்த தவறான மற்றும் அபத்தமான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிக்கிறது " என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "ஐ.சி.சி ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. இது ஒரு பாரபட்சமான அரசியல் அமைப்பு" என்றும் ஐ.சி.சி மீது இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
"இஸ்லாமிய ஆதரவாளர்கள் வசப்பட்ட ஒரு அரசியல் அமைப்பின் வெட்கக்கேடான முடிவு இது" என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழுவின் தலைவர் யூலி எடெல்ஸ்டெய்ன் கூறினார்.
சட்டபூர்வமான தன்மையை ஐசிசி இழந்துவிட்டதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.
தனது சொந்த இராணுவத் தளபதி முகமது டெய்ஃபுக்கு வாரண்ட் பிறப்பித்தது குறித்து கருத்து தெரிவிக்காமல், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது குறித்தான முடிவை ஹமாஸ் வரவேற்றுள்ளது.
"உலக நாட்டினரிடம் போர் குற்றவாளிகளான சியோனிச நெதன்யாகு மற்றும் கேலண்டை நீதிமன்ற கூண்டில் ஏற்ற ஒத்துழைக்க வேண்டும் என்றும், காஸா பகுதியில் அப்பாவி மக்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலைக் குற்றங்களை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்," என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

காஸாவில் பாலத்தீன பொதுமக்களும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
"நாங்கள் பயமுறுத்தப்பட்டுள்ளோம், பட்டினியால் வாடினோம், எங்கள் வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன, எங்கள் குழந்தைகள், மகன்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்துள்ளோம். இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம், நிச்சயமாக, ஐசிசியின் அறிவிப்பு செயல்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என கூறுகிறார் முஹம்மது அலி. அவர், காஸா நகரத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்போது டெய்ர் அல்-பாலாஹ்வின் மத்தியப் பகுதியில் வசித்து வரும் 40 வயது மதிக்கத்தக்க நபர்.
"என் சகோதரி வஃபா உட்பட பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்திருக்கும் நீதி" என்று முனிரா அல்-ஷாமி ஐசிசியின் முடிவு குறித்து கூறுகிறார். கடந்த மாதம் இஸ்ரேலிய படைகளால் அவரது சகோதரி கொல்லப்பட்டார்.
ஆனால், சில இஸ்ரேலியர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமைக்கு எதிராக இந்த கைது அறிவிப்பு உள்ளது என்று கூறுகின்றனர்.
"ஆனால் இது ஒன்றும் எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை," என்று கூறும் ரோன் அகெர்மன், ஐ.சி.சி. முழுக்க முழுக்க இஸ்ரேலிய எதிர்ப்புடன் செயல்படுகிறது என்றும், இஸ்ரேலில் உண்மையில் என்ன நடக்கிறது ஐ.சி.சி. பார்க்க தவறிவிட்டது என்றும் கூறுகிறார்.
ஜெருசலேமில் உள்ள ஹெலன் கரிவ் இது பற்றி பேசும் போது, "நான் முதல் முறையாக இதை கேட்கும் போது, பிரதமரையும் அவரின் முதன்மை அதிகாரியையும் கைது செய்யும் எண்ணம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று தான் தோன்றியது. நாங்கள் வாழ்வதற்காக சண்டையிடுகிறோம்," என்று கூறினார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இஸ்ரேல் தவிர்த்து, பிரிட்டன் உட்பட மொத்தம் 124 நாடுகள் ஐசிசியில் உறுப்பு நாடுகளாக கையெழுத்திட்டுள்ளன.
எனவே, சட்ட ரீதியாக, நெதன்யாகு அல்லது கேலண்ட் ஐசிசி கையெழுத்திட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
ஆனால், அந்த நபர் எப்போதாவது நெதர்லாந்தின் ஹேக்கிற்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுவாரா என்பது குறித்து சர்வதேச வழக்கறிஞர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
நெதன்யாகு கடைசியாக  கடந்த ஜூலை மாதம் , இஸ்ரேலுக்கு வெளியே, அமெரிக்காவுக்கு பயணம் செய்தார். ஐசிசியில் அமெரிக்கா இன்னும் கையெழுத்திடாததால் அங்கு தண்டனையின்றி அவர் செல்லலாம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், அவர் பிரிட்டன் உட்பட பல நாடுகளுக்குச் சென்றார். அவற்றில் பல நாடுகள் ஐசிசியில் கையெழுத்திட்டவை.
இந்த நாடுகளுக்கு மீண்டும் செல்வதன் மூலம் அவர் கைதுக்கு ஆளாக நேரிடும் என்பதால், அவர் அங்கு செல்ல மாட்டார் என நம்பப்படுகின்றது. மேலும் அந்த நாடுகளும் அப்படி ஒரு நிலையை விரும்பாது.
இப்ராஹிம் அல்-மஸ்ரி என்று அழைக்கப்படும் முகமது டெய்ஃப் மீதான ஐசிசி வாரண்ட் குறித்து ஹமாஸ் சிறிதும் அஞ்சவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் நம்புகிறது, இருப்பினும் இது ஹமாஸ் தரப்பால்  உறுதிப்படுத்தப்படவில்லை.
பட மூலாதாரம், Getty Images
ஐசிசி முதலில் வழக்குத் தொடர திட்டமிட்டிருந்த மற்ற இரண்டு ஹமாஸ் தலைவர்களான யாஹ்யா சின்வார் மற்றும் இஸ்மாயில் ஹனியே ஆகிய  இருவரும் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நல்ல மற்றும் தீய சக்திகளுக்கு இடையிலான சண்டை இது என்று காஸாவில் தனது ராணுவ பிரசாரத்தை முன்வைக்க இஸ்ரேல் எடுத்து வந்த முயற்சிகளுக்கு, வியாழன் அன்று வெளியாகியுள்ள ஐசிசியின்  அறிவிப்பு ‘ஒரு பெரிய அடியாகும்’ என்பதில் சந்தேகம் இல்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் செய்த அட்டூழியங்களை உலகம் ஏற்கனவே மறந்துவிட்டதா அல்லது கவனிக்காமல் விட்டதா   என்று இஸ்ரேல் சார்பில் கேட்கிறார்கள்.
இஸ்ரேலிய போர்க்குற்றங்கள் குறித்த தங்களது குற்றச்சாட்டுகள் இப்போது ஒரு சர்வதேச அமைப்பால் எதிரொலிக்கப்பட்டு, நியாயம் கிடைத்துள்ளதாக பாலத்தீனர்களும், காஸா மக்களும் நம்புகின்றனர்.

Related Post