சென்னை: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்ற இசைஞானி இளையராஜா கோவில் கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர் வெளியில் இருந்தே சாமி தரிசனம் செய்தார். இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில், நடிகரும் இயக்குனருமான அமீர், சனாதனம் தலைவிரித்தாடும் நாட்டில் சமத்துவம் எப்போது மலரும்? என்று கருத்து தெரிவித்து உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இன்று மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் ஆண்டாள் கோவிலில் காலை திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி மற்றும் நாட்டியாஞ்சலி நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு இசைஞானி இளையராஜா வந்திருந்தார். அப்போது அவர் கோவில் கருவறைக்கு செல்ல முயன்றதாகவும், ஆனால் அவர் அனுமதிக்கப்படவில்லை என்று சர்ச்சை கிளம்பியது. அர்த்த மண்டபமும் கருவறை போன்றது என்றும், இளையராஜா தவறுதலாக நுழைந்ததால் உடனே கோவில் நிர்வாகம் அவரிடம் எடுத்து கூறியதாகவும், பின்னர் அவர்களது அறிவுறுத்தலை கேட்டுக்கொண்டு வெளியில் நின்றே இளையராஜ சாமி தரிசனம் செய்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான அமீர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். உலக அரங்கில் இசைஞானியாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதி இல்லை என்று அவர் கூறியுள்ளார். அமீத கூறியிருப்பதாவது:- இந்திய திருநாட்டின் பிரதமராக இருந்தாலும், தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தாலும், உலக அரங்கில் இசைஞானியாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதி இல்லை. சனாதனம் தலைவிரித்தாடும் நாட்டில் சமத்துவம் எப்போது மலரும்? என்று அமீர் தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டசாக போட்டுள்ளார்.
முன்னதாக இது குறித்து இந்து அறநிலையத்துறையும் விளக்கம் அளித்துள்ளது. அதில், அர்த்த மண்டபத்திற்குள் மற்றவர் செல்லும் வழக்கமில்லை. அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டே அர்த்த மண்டபத்திற்கு முன்பு நின்று இளையராஜா சாமி தரிசனம் செய்தார். என்று கூறியுள்ளது.
மேலும் கூறுகையில், "15.12.2024 அன்று இசையமைப்பாளர் திரு. இளையராஜா அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்த போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும், ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என்றும், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.