லக்னோ: உத்தர பிரதேசத்தில் தனது தோழியை கரம் பிடிப்பதற்காக இளம்பெண் ஒருவர் ரூ.7 லட்சம் செலவழித்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
திருமணம் செய்ய தற்போது சிலர் மதம் மாறுகின்றனர். இன்னும் சிலரோ ஜாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கடந்து தங்களுக்கு பிடித்த துணையை கரம் பிடிக்கின்றனர். இதனை நாம் அடிக்கடி கேட்டு இருப்போம். ஆனால் உத்தர பிரதேசத்தில் வித்தியாசமான திருமணம் ஒன்று நடந்துள்ளது.
அதாவது தோழியை கரம்பிடிக்க செய்வதற்காக இளம்பெண் ஒருவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:
உத்தர பிரதேச மாநிலம் கனாஜ் பகுதியை சேர்ந்தவர் இந்திர குப்தா. இவர் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மகளன் பெயர் சிவாங்கி. கடந்த 2020ம் ஆண்டில் சிவாங்கி தனது தந்தையின் நகைக்கடையில் இருந்தார்.
அப்போது கடைக்கு ஜோதி என்பவர் நகை வாங்க வந்தார். இவர் சொந்தமாக பியூட்டி பார்லர் வைத்துள்ளார். எதார்த்தமாக ஜோதி மற்றும் சிவாங்கி ஆகியோர் பேசினர். இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே நட்பாக மாறியது. அதன்பிறகு இருவரும் சேர்ந்து அடிக்கடி வெளியே செல்ல ஆரம்பித்தனர். வீட்டில் ஒன்றாக இருக்க வேண்டும். இருவருக்கும் இடையேயான உறவு அடுத்தக்கட்டத்துக்கு சென்றது.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்தனர். இதனால் இருவரும் பிரியவே கூடாது என்று முடிவு செய்தனர். இருவரும் பெண்கள். இருவருக்கும் திருமணம் நடந்து விட்டால் பிரிந்து தான் செல்ல வேண்டும் என்று நினைத்தனர். அப்போது தான் இருவரும் வித்தியாசமான முடிவை எடுத்தனர். அதாவது சிவாங்கி - ஜோதி ஆகியோர் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.
நம் நாட்டை பொறுத்தவரை ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணம் என்பது சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் சிவாங்கியும், ஜோதியும் இன்னொரு முடிவை எடுத்தனர். அதாவது ஒருவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது என்று முடிவு செய்தனர். அதன்படி நகைக்கடைக்காரரின் மகள் சிவாங்கி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆணாக மாற முடிவு செய்தார்.
இதுபற்றி இருவரும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். தொடக்கத்தில் அவர்களின் குடும்பத்தினர் எதிர்த்தனர். இருவரும் பெண்ணாக ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. அதோடு மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்று அவர்கள் மனவருத்தம் அடைந்தனர்.
இருப்பினும் சிவாங்கி - ஜோதி ஆகியோர் தங்களின் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சிவாங்கி உறுப்பு மாற்றுக்கான 3 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். மொத்தம் ரூ.7 லட்சம் செலவில் இந்த அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. டெல்லி மற்றும் லக்னோவில் உள்ள டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து சிவாங்கி பார்க்க ஆண் போல் மாறினார். அவரது பேண்ட், சட்டை அணிவதை வழக்கப்படுத்தி கொண்டதோடு, சிவாங்கி என்ற பெயரை ராணு என்று மாற்றி கொண்டார். இதையடுத்து ராணு - ஜோதி குடும்பத்தின் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் என்பது கடந்த மாதம் 25ம் தேதி நடந்து முடிந்துள்ளது.
இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஒரு தரப்பினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இன்னொரு தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது ராணு உறுப்பு மாற்றுக்கான 3 அறுவை சிகிச்சைகள் செய்துள்ள நிலையில் இன்னும் ஒரு சிகிச்சை பாக்கி உள்ளது. அதுவும் உறுப்பு மாற்றுக்கான அறுவை சிகிச்சை தான். அந்த சிகிச்சை முடிந்துவிட்டால் ராணு முழு ஆணாக மாறிவிடுவாராம் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.