லோக்சபா தேர்தலில் ஓட்டு போடணுமா? வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்..

post-img

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள இன்று சனிக்கிழமை நாளை ஞாயிற்றுக்கிழமை ,அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விரும்புபவர்கள் என்னென்ன கொண்டு செல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.


இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா 2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வரும் 2024 ஜனவரி முதல் தேதியை தகுதி பெரும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணி கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணி டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் முதல் தேதியில் 18 வயது பூர்த்தியாக உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் பெயர் நீக்கமும் செய்து கொள்ளலாம்.


இதற்கான சிறப்பு முகாம் நவம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முகாம் நடைபெறுகிறது. இரு சிறப்பு முகாம்கள் வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.


வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும் நீக்கம் செய்ய voterhelpline app, www.nvsp.in மற்றும் www.voters.eci.gov.in இணைய சேவைகளின் மூலம் தகுந்த ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். வங்கியின் பாஸ்புக், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்று இந்த சிறப்பு முகாம்களில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.

 

Related Post