பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 193 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. முதற்கட்ட கலந்தாய்வில், 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற 80 மாணவர்களில் 42 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், AI, data science, ECE படிப்புகளில் சேர்ந்திட மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 20 கல்லூரிகளில் மட்டும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 90 சதவீத மாணவர்கள் 3 கல்லூரிகளிலும் 75 சதவீத மாணவர்கள் 10 கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகம், எம்.ஐ.டி வளாகம், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிகளில் 90 சதவீதத்திற்கு அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள 440 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 71 இடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.