கோயம்பேடு சந்தையில் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது தக்காளி விலை.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில், இன்று எப்பொழுதும் இல்லாத அளவிற்கு 700 டன் வரத்து குறைந்து 400 டன் அளவிற்கு மட்டுமே தக்காளி வந்தது. இதனால் இன்று மொத்த விற்பனையில் 1 கிலோ தக்காளி 130க்கும் , சில்லறை விற்பனையில் 1 கிலோ தக்காளி 150க்கும், சென்னை புறநகரில் 160 முதல் 180 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விளைச்சல் அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தட்டுப்பாடு காரணமாக வட மாநிலங்களில் கிலோ 230 முதல் 260 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திராவில் ஓரளவிற்கு தக்காளி விளைச்சல் உள்ள நிலையில் பல்வேறு வட மாநில வியாபாரிகளும், ஆந்திராவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய துவங்கியுள்ளனர். இதனால், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தக்காளி, வட மாநிலங்களுக்கு செல்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, கூட்டுறவு துறை வாயிலாக 1 கிலோ தக்காளி 58முதல் 60 ரூபாய்க்கும் ஒரு சில இடங்களில் 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.