ஆடிப்பெருக்கில் தாலிக் கயிறு மாற்றும் நேரம்... ஜோதிடம் கூறும் தகவல்கள் இதுதான்...

post-img

நம்முடைய வீட்டில் எப்படி இந்த ஆடிப் பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதை பற்றியும் தலி கயிற்றை மாற்றும் முறை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

புதிதாக திருமணமாகும் மணப்பெண் அணிந்திருக்கும் மாங்கல்யத்தின் இரு புறமும் லட்சுமி காசு, மணி, பவளம் கோர்த்து, அவரது கழுத்தில் சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பது தாலி பெருக்குதல் வைபவம். முதன் முதலில் மஞ்சள் கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும் போது மங்களகரமான தாலியுடன், லட்சுமி காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதை ஒற்றைப்படை மாதத்தில்தான் மணமகன் வீட்டில் நடத்துவர்.

பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். அதிலும் ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீர் பெருக்கு ஏற்படும் என்பது நம்பிக்கை. அன்று நதிக்கரைகளில் வழிபாடு நடத்தப்படும்.

அந்த நாளில் நதிக்கரைகள், கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு சாப்பிடும் வழக்கமும் இருந்துள்ளது. புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு.

அன்றைய தினம் பெண்கள், கோயில்களில் தாலி கயிறை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர்.

Related Post