விருதுநகர்: ஒன்றிய அரசு வழங்கியுள்ள 944 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ள 75% பங்கீட்டு தொகை மட்டுமே எனவும், புயல் பாதிப்பிற்காக கேட்கப்பட்ட தேசிய பேரிடர் நிதியிலிருந்து எதுவும் வழங்கப்படவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,"பொதுவாக இயற்கை பேரிடர் நிகழும் காலங்களில் மாநிலங்களுக்கு உதவும் வகையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படும்.
அதேபோல ஒவ்வொரு மாநில வாரியாக 15-வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கக்கூடியது மாநில பேரிடர் நிதி. தற்போது ஒன்றிய அரசு நமக்கு வழங்கியிருப்பது 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டிய 75% தொகையாகும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒன்றிய அரசு வழங்கிய மாநில பேரிடர் நிதியின் விவரம், 2021 -2022 ஆம் ஆண்டு மாநில பேரிடர் நிதி 1088 கோடி. இதில் ஒன்றிய அரசின் பங்கு 816 கோடி மாநில அரசின் பங்கு 272 கோடி. அதேபோல் 2022 -2023 ஆம் ஆண்டு மாநில பேரிடர் நிதி 1142 கோடி. இதில் ஒன்றிய அரசின் பங்கு 856.50 கோடி மாநில அரசு 255.50 கோடி. தொடர்ந்து 2023 -2024 ஆம் ஆண்டு மாநில தேசிய பேரிடர் நிதி 1200 கோடி. இதில் ஒன்றிய அரசு 900 கோடி, மாநில அரசு 300 கோடி.
2024 -2025 ஆம் ஆண்டுக்கான மாநில பேரிடர் நிதி 1260 கோடி. அதில் ஒன்றிய அரசின் பங்கு 945 கோடி, மாநில அரசின் பங்கு 315 கோடி. இதில் கூறப்பட்டுள்ள 945 கோடியில் இருந்து தான் மத்திய அரசு 944.80 கோடியை விடுவித்துள்ளது. ஆனால் இந்தத் தொகை ஜூன் மாத வழங்க வேண்டியது, தாமதமாக டிசம்பர் மாதம் வழங்கியுள்ளது.
முன்னதாக கடந்த நிதியாண்டில் மிக்சாம் புயல் மற்றும் தென் மாவட்ட கனமழை காரணமாக பெரும் சேதம் நிகழ்ந்தது. அப்போது தேசிய பேரிடர் நிதியிலிருந்து 37,906 கோடி விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். ஆனால் ஒன்றிய அரசு தேசிய பேரிடர் நிதியிலிருந்து பெரும் 276 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியது. இதில் நாம் கேட்டதிலிருந்து ஒரு சதவீதம் கூட வழங்கப்படவில்லை.
தற்போது பெய்த ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 14 மாவட்ட மக்களின் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக பொது நிவாரண நிதியிலிருந்து விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், பேரிடரில் கைகொடுக்க வேண்டிய ஒன்றிய அரசு, ஜீன் மாதம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2024 - மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான தனது பங்கு தொகையான ரூ. 944 கோடியை மட்டுமே விடுவித்துள்ளது. இதுவே ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது போன்ற பொய் பிம்பம் பரப்பப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, இது போன்ற பேரிடர் சூழல்களிலாவது மாநில அரசுக்கு உதவியாக இருந்து, மக்கள் நலனைக் காக்க வேண்டும். ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்கள் உரிய நிவாரணம் பெறவும் மீட்பு பணிகள் சுனக்கமின்றி தொடரவும் உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும்" எனக் கூறினார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage