சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நபர் ஒருவர் தான் இஸ்ரோவில் பணியாற்றியதாகவும் தான்தான் சந்திரயான் 3 லேண்டரை உருவாக்கியதாகவும் கூறிய நிலையில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணிற்கு அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரமும் ரோவர் பிரக்யானும் தரையிறங்கியது. ரோவர் பிரக்யான் நிலவில் இறங்கியது அங்கு ஒரு வலம் வந்தது.
நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடுகளும் கால் பதிக்காத நிலையில் இந்தியா முதல் நாடாக அங்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த 14 நாட்களும் 6 சக்கரங்களை கொண்ட பிரக்யான் நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சிகளை செய்யும்.
இந்த விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானின் ஆயுட்காலம் ஒரு நிலவு நாள் ஆகும். அதாவது 14 நாட்கள். நிலவில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 5 கருவிகள் லேண்டரில் அனுப்பப்பட்டன. அது போல் ரோவரில் ஆல்பா எக்ஸ் ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் அனுப்பப்பட்டுள்ளது. இது நிலவில் ரசாயன பொருட்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யும்.
அது போல் தரையிறங்கும் இடத்தில் நிலவில் மண், பாறைகள் இருக்கின்றனவா என்பதையும் இது ஆய்வு செய்யும். லேண்டரில் ரம்பா எனும் கருவி அனுப்பப்பட்டுள்ளது. இது நிலவில் அயனிகள், எலக்ட்ரான்கள் எவ்வளவு இருக்கின்றன ,அதன் அடர்த்தி என்ன என்பதை அளவிடும். நிலவில் தென் பகுதி குளிர்ச்சியான பகுதி. எனவே இங்கு வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதா கண்டறியும் கருவியும் அனுப்பப்பட்டுள்ளது.
நிலவில் அசத்தும் சந்திரயான் 3.. 2 இலக்கு வெற்றி.. இன்னும் 1 மட்டுமே பாக்கி.. இஸ்ரோ சொன்ன செம தகவல்
அது போல் நிலவில் நில அதிர்வு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்யவும் ஒரு கருவி அனுப்பப்பட்டுள்ளது. இந்த 14 நாட்களும் தற்போது சூரிய வெளிச்சம் நிலவில் படும் என்பதால் ரோவர் சுற்றி சுற்றி புகைப்படம் எடுக்கும். அது எடுத்த செய்திகளை லேண்டர் தகவல்களாக பூமியில் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கும். ரோவருடன் இஸ்ரோவுக்கு எந்த தொடர்பும் இல்லாததால் அது லேண்டருடன் தொடர்பிலேயே இருக்கும்.
நிலவின் தென் பகுதியில் உறைந்த நிலையில் தண்ணீர் இருந்தால் ஆக்ஸிஜன், எரிபொருள், தண்ணீருக்கான ஆதாரமாக அது விளங்கும். இந்த ஆய்வைதான் ரோவர் மேற்கொள்ள போகிறது. நேற்றைய தினம் இந்த லேண்டரும் ரோவரும் தரையிறங்கிய காட்சிகளை இஸ்ரோ நேரலையாக ஒளிபரப்பியது. இந்த வரலாற்றுச் சாதனையை ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் லேண்டரின் சாய்வுதளத்தில் இருந்து ரோவர் அழகாக இறங்கி தான் தரையிறங்கிய பகுதியை சுற்றி வந்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஒருவர் தான்தான் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை வடிவமைத்ததாக கூறியுள்ளார்.
சூரத்தை சேர்ந்தவர் மிதுல் திரிவேதி. இவர் உள்ளூர் சேனல்களில் பேட்டி அளித்து வருகிறார். அதில் தான்தான் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை வடிவமைத்தேன் என்கிறார். அவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்ததாகவும் தெரிிவத்துள்ளார். அவர் பிஎச்டி பட்டம் படித்துள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும் அவர் சந்திரயான் 2 திட்டத்திலும் பணியாற்றியதால் தன்னை சந்திரயான் 3 திட்டத்திலும் பணியாற்றுமாறு இஸ்ரோ அழைத்ததாக கூறுகிறார். ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட லேண்டரில் பல மாற்றங்களை செய்ததால் மட்டுமே இன்று இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது என்கிறார். இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்போது இஸ்ரோவில் பணியாற்றியதற்கான சான்றுகளை தருமாறு கேட்டால் அவர் அதை தர முன் வரவில்லை. இந்த நிலையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஒரு பிகாம் பட்டதாரி என கண்றியப்பட்டுள்ளது. அவர் இஸ்ரோவின் பெங்களூர் அலுவலகத்தில் சந்திரயான் 3 திட்டத்தின் வடிமைப்பு பிரிவில் ப்ரீலாண்சராக பணியாற்றினாராம். அவர் நாசாவில் பணியாற்றியதாகவும் சொல்கிறார்.
முதற்கட்ட விசாரணையின் படி அவர் இஸ்ரோ விஞ்ஞானி அல்ல. அவரிடம் குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு வேளை அவர் கூறியது பொய் என்றால் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.