சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிட்டு வரும் நிலையில், அதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும். நாட்டின் பன்முகத்தன்மை, ஜனநாயகத்தை ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அழித்துவிடும் எனக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த மசோதாவுக்கு கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதால் இதுதொடர்பாக பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் அறிமுகம் செய்ய மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடப்பு குளிர்கால கூட்டத் தொடர் வரும் 20ம் தேதியுடன் முடிகிறது. அன்றைய நாளில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்தியா கூட்டணி வலுவாக எதிர்க்கிறது. இது நம் நாட்டை ஒற்றை ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு போய் தள்ளிவிடும். மேலும் பன்முகத்தன்மை, ஜனநாயகம் ஆகியவற்றை முற்றிலும் அழித்துவிடும்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான அதிபர் தேர்தல் முறையை நடத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு தள்ள முயல்கிறது. முன்மொழியப்பட்ட இந்த மசோதா, நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டால், சட்ட ரீதியாக இருக்கும் வாய்ப்புகளை நீக்கி விடும். நம்முடைய அரசியலமைப்பை சர்வாதிகார தன்மையின் கீழ் கொண்டு போய் சேர்த்து விடும்.
மேலும், மாநிலத் தேர்தல்கள் அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை இழக்கும். மாநிலங்கள் உரிமையை இழந்து பிராந்திய உணர்வுகள் மற்றும் பன்முகத்தன்மை அழிக்கப்படும். இந்தியாவின் அரசியலை மாற்றியமைக்க அச்சுறுத்தும் முக்கியமான சட்டத்தை நிறைவேற்ற பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இருப்பினும் கூட, நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பாஜகவின் தோல்வியிலிருந்து திசை திருப்ப ஒரு துணிச்சலான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவையும், அதன் பன்முகத்தன்மையையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு, தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்படும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்த்துப் போராட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.