சென்னை: நடிகர் விஜய்யின் கொள்கைகளில் புதியதாக ஒன்றுமே இல்லை என்றும் அவரது வருகை திமுகவைத்தான் பாதிக்கும் என்றும் ஹெச்.ராஜா தெரிவித்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திமுகவைக் கடுமையாக எதிர்க்கிறார். திமுகதான் தங்களின் எதிரி என பகீரங்கமாக அவர் முதல் மாநாட்டிலேயே அதிரடியாக அறிவித்துவிட்டார். அதற்கு அடுத்ததாக நடந்த பொது நிகழ்ச்சியான அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், 2026 திமுக கூட்டணிக் கணக்குகள் உடையும் என்று எச்சரித்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் கூட அவர் பாஜக ஆட்சியை அட்டாக் செய்யவில்லை. மணிப்பூர் பற்றிப் போகின்ற போக்கில் பேசினாரே ஒழிய, மோடியைப் பற்றியும் அவரது செயல்பாடு பற்றியும் எந்த விமர்சனத்தையும் அவர் முன்வைக்கவில்லை. அந்தவகையில் விஜய்யை பாஜகவின் பி டீம் என்று திமுக உடன்பிறப்புகள் ஒரு கருத்தைப் பரப்பு வருகின்றனர்.
இந்த வாதத்திற்கு தனது மாநாட்டிலேயே விஜய் விளக்கம் அளித்திருந்தார். 'பாஜக பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?' எனக் கேட்டுவிட்டுக் கடந்து போய்விட்டார். இப்போது விசிகவிலிருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனாவையும் விஜய்யையும் இணைத்து பாஜக இயக்கி வருவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் பேசத் தொடங்கி இருக்கின்றன.
பலரும் விஜய் வருகை சீமான் மற்றும் அதிமுகவைப் பாதிக்கும் எனக் கூறி வந்த நிலையில் விஜய் வருகையால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று அடித்துச் சொல்கிறார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா. ஏனெனில் விஜய்யின் கொள்கைகள் அனைத்து கிட்டத்தட்ட திமுகவில் ஜெராக்ஸ் காப்பிதான் என்றும் தெரிவித்திருக்கிறார்.
"நீட் தேர்வை திமுக எதிர்க்கிறது திமுக. அதையேதான் விஜய்யும் சொல்கிறார். இந்த நீட் விவகாரத்தில் திமுக நேர்மையாக நடந்துகொள்ளவே இல்லை. நீட் பரீட்சைக்கான திட்டத்தை 2010இல் வகுத்துக் கொடுத்ததே திமுக மத்திய அமைச்சர் காந்தி செல்வன். நீட் தேர்வு முதன்முதலாகக் காங்கிரஸ் ஆட்சியில் 2013இல் தான் நடைபெற்றது. ஆகவே, திமுகவின் நீட் எதிர்ப்பு முறைகேடானது. அந்த நீட் எதிர்ப்பு குழந்தையை இப்போது விஜய் தத்தெடுத்து இருக்கிறார்.
விஜய் திமுகவின் கொள்கையை எதிர்க்கவில்லை. ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியை எதிர்க்கிறார். ஆக, அவரால் திமுக ஓட்டுகள் பிரியும். அவர் தேசிய எண்ணம் கொண்ட வாக்குகளைப் பிரிக்கவில்லை. எனவே பாஜகவுக்கு அவரால் பாதிப்பு இல்லை" என்று ஆகாயம் தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
விஜய்யை பாஜகதான் பின்புலமாக இருந்து இயக்கி வருகிறது என்ற பற்றிப் பேசுகையில், "முதலில் சீமானை பிஜேபி பி டீம் என்றார்கள். இப்போது விஜய்யைச் சொல்கிறார்கள். சீமானின் தமிழ் உணர்வு எனக்குப் பிடிக்கும். திராவிடம் என்பது இனம் அல்ல. அது ஒரு நிலப்பரப்பு என 30 வருடங்களாகச் சொல்லி வருகிறேன். அதையே சீமான் சொல்கிறார். ஆனால், தமிழ்த் தேசியம் என்பதை நான் ஏற்கவில்லை. எனவே யாரையும் இயக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை" என்று பேசி இருக்கிறார்.
மேலும் பாஜக யாருடைய துணையும் இல்லாமல் 1996 வரை தனித்துத்தான் போட்டியிட்டு வளர்ந்துவந்தது. அதன் பின்னர்தான் கூட்டணிக்கு ஜார்ஜ் பெர்னாடஸ் வந்தார். எனவே தமிழ்நாட்டிலும் நாங்கள் வளர்ந்து வந்திருக்கிறோம். 2024 தேர்தலில் அதிமுக 1 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக 80 லட்சம் பெற்றுள்ளது. அதை 2026இல் மாற்றிக் காட்டுவோம்" என்கிறார்.