ரியாத்: சவுதி அரேபியா முழுக்க முழுக்க எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பி இருந்த ஒரு நாடு. இப்போது கச்சா எண்ணெய் தேவை குறையும் நிலையில், மாற்று வழிகளில் வருவாய் ஈட்டுவது குறித்து சவுதி ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையே அங்கு வெள்ளைத் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது ஒட்டுமொத்தமாகச் சவுதியை மொத்தமாகப் புரட்டிப் போடும் என்பதில் சந்தேகம் இல்லை.
சவுதி அரேபியா என்றவுடன் நமக்கு எப்போதும் ஞாபகத்திற்கு வருவது அதன் எண்ணெய் வளம் தான். உலகிற்கே கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடாகச் சவுதி அரேபியா இருந்து வருகிறது.
இந்த ஒற்றை வருமான மூலதனத்தை வைத்துக் கொண்டே சவுதி பெரியளவில் சம்பாதித்துவிட்டது. இதன் மூலமாகவே சவுதி தனது பாலைவன நிலப்பரப்பை மிகப் பெரிய நாடாக மாற்றி இருக்கிறது. அதேநேரம் இப்போது சர்வதேச நாடுகள் மெல்லக் கச்சா எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து வருகிறார்கள். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். ஏற்கனவே, சீனா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையத் தொடங்கிவிட்டன.
வரும் காலங்களில் உலகின் மற்ற பகுதிகளிலும் இதே நிலை தான் தொடரப் போகிறது. இதனால் வருவாய்க்கான மாற்று வழிகளைத் தேடி, சவுதி இப்போதே அதில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாகச் சுற்றுலாத் துறையில் சவுதி அரேபியா கவனம் செலுத்தி வரும் நிலையில், இப்போது அந்த நாட்டிற்கு மிகப் பெரிய ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. எண்ணெய் வளம் மிக்க சவுதியில் வெள்ளைத் தங்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
தங்கம் மஞ்சள் கலரில் தானே இருக்கும்.. அதென்ன வெள்ளைத் தங்கம் என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.. சவுதியில் மிக பெரியளவில் லித்தியம் ரிசர்வ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சவுதி கடற்கரை அருகே இந்த பிரம்மாண்ட லித்தியம் ரிசர்வ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தான் வெள்ளைத் தங்கம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதன் எண்ணெய் வயல்களில் நடத்தப்பட்ட சோதனையில் சவுதி அரசுக்குச் சொந்தமான அராம்கோ நிறுவனம் லித்தியத்தை வெட்டி எடுத்துள்ளது. விரைவில் வணிக ரீதியில் லித்தியத்தை எடுக்கும் திட்டத்திற்கான பைலட் திட்டம் தொடங்கப்படும் என்று சவூதி அரேபியச் சுரங்க விவகாரங்களுக்கான துணை அமைச்சர் காலித் பின் சலே அல்-முதைஃபர் அறிவித்துள்ளார்.
அங்குள்ள கிங் அப்துல்லா பல்கலைக்கழகத்தின் லித்தியம் இன்பினிட்டி என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் சவுதி சுரங்க நிறுவனங்களான மேடென் மற்றும் அராம்கோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. புதிய முறையில் லித்தியத்தை வெட்டி எடுக்கும் முறையை லித்தியம் இன்பினிட்டி கண்டறிந்துள்ள நிலையில், அந்த முறையைப் பின்பற்றவும் சவுதி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக உப்பு நீர் இருக்கும் பகுதிகள் அருகே உள்ள மண்ணில் இருந்தே லித்தியம் பிரித்தெடுக்கப்படும். அத்துடன் ஒப்பிடும் போது எண்ணெய் வயல்களில் இருந்து லித்தியத்தை பிரித்தெடுப்பதற்கான செலவு அதிகமாகவே இருக்கும். இருப்பினும், லித்தியம் விலை வரும் காலத்தில் உயரலாம் என்பதால் இது வணிக ரீதியாக லாபகரமானதாக இருக்கும் என்று சவுதி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இப்போது கிட்டதட்ட உலகின் அனைத்து நாடுகளும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் நோக்கி நகர்ந்து வருகிறது. அதில் மின்சாரத்தைச் சேமித்து வைக்க லித்தியம் அடிப்படையிலான பேட்டரிக்கள் ரொம்பவே முக்கிய பங்கு வகிக்கிறது. வரும் காலத்தில் இதன் தேவை பல மடங்கு அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே லித்தியத்தை வெள்ளைத் தங்கம் என அழைக்கிறார்கள்.