அரியலூர்: தமிழக வெற்றிக் கழகத்தில் மகளிருக்கு மரியாதை இல்லை என தான் ஏற்றி வைத்த கொடியை அரியலூரில் பெண் ஒருவர் இறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்தப் பெண்ணின் சகோதரர்கள் திமுகவில் இருப்பதாகவும், இரண்டு மாதத்திற்கு முன் தான் அந்த பெண் கட்சியில் சேர்ந்து கொடியை ஏற்றி விட்டு, அதற்குப் பிறகு கொடியை திட்டமிட்டு இறக்கி உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள்.
நடிகர் விஜய் அரசியலில் குதித்ததில் இருந்தே பல விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய போதே பல விமர்சனங்களை சந்தித்தார். மேலும் வெள்ளத்தில் மக்களை சந்திக்காமல் ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்வதாகவும் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
அதே நேரத்தில் திமுக, அதிமுக, விசிக, நாம் தமிழர் என பல கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் நிர்வாகிகளும் விஜய் குறித்து பேசி வருகின்றனர். ஆதரவாகவோ எதிராகவோ விஜய் குறித்து பேச வேண்டும் என்ற நிலை தமிழக அரசியலில் இப்போதைக்கு நீடிக்கிறது.
நடிகர் விஜய்:
மேலும், சமூக வலைதளங்களில் விஜய் குறித்து ஏதாவது ஒரு விஷயம் அவ்வப்போது ட்ரெண்ட் ஆவது வழக்கம் தான். அப்படி ஒரு செய்தி தற்போது ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அரியலூரை சேர்ந்த பெண் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தில் மகளிருக்கு மரியாதை இல்லை என தான் ஏற்றி வைத்த கொடியை இறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து திமுக உள்ளிட்ட கட்சிகள் விஜய் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகம்:
அதே நேரத்தில் அந்தப் பெண் திட்டமிட்டு இவ்வாறு செய்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள். என்ன நடந்தது? என்பது குறித்து விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. நடிகர் விஜய் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கட்சி தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மாவட்டம் தொடங்கி ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
தவெக மகளிரணி நிர்வாகி:
ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பதவிகளை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. போஸ்டர் ஒட்டிய தொண்டர்களுக்கே பதவி, புதிதாக வந்தவர்களுக்கு மரியாதை கிடைக்கும் என பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்ததும் இங்கே கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் பழூர் ஒன்றியத்தை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகியான பிரியதர்ஷினி என்பவர் தன்னுடைய சொந்த செலவில் அப்பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பத்தை தயார் செய்து வைத்திருந்தார்.
தவெக கொடி இறக்கம்:
2 நாட்களுக்கு முன்பு நிர்வாகிகளுடன் சேர்ந்து அவர் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மற்ற நிர்வாகிகள் தாங்கள்தான் அரசியல் செய்வது போலவும் பெண்கள் எதுவுமே செய்யவில்லை என்பது போல் காட்டிக் கொள்வதாக குற்றம் சாட்டியதோடு பெண்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை என பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்தார். மேலும் தான் ஏற்றி வைத்த கொடியை அவரே இறக்கியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் சொன்ன தகவல்:
இது தொடர்பாக பேசிய அவர்,” நான் பழூர் ஒன்றிய மகளிர் அணி நிர்வாகியாக உள்ளேன். நேற்று (21ஆம் தேதி) எங்கள் ஊரில் கொடியேற்றினோம். மேலும் பல பகுதிகளுக்கும் சென்று கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். விஜய் விக்கிரவாண்டியில் கொடியேற்றியதற்கு பிறகு பல ஊர்களுக்கும் பயணம் செய்து கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். எங்கள் ஊரில் கஷ்டப்பட்டு செலவு செய்து கொடிக் கம்பம் அமைத்தேன். ஆனால் யாருமே எனக்கு மரியாதை தரவில்லை.
பெண்களுக்கு மரியாதை இல்லை:
பெண்களுக்கு மரியாதை தரவேண்டும் என விஜய் சொன்னாலும், மற்ற நிர்வாகிகள் அது போல் செய்வதில்லை. தாங்களே செலவு செய்தது போல காட்டிக் கொள்கிறார்கள். கட்சியில் எனக்கு மரியாதை இல்லை. நான் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக சதி செய்கின்றனர்” என குற்றம் சாட்டி இருந்தார். இதை அடுத்து விஜயின் முகமூடி கிழிந்து விட்டதாக திமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.
திமுக சதி:
இந்த நிலையில் அந்தப் பெண்ணின் சகோதரர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் திட்டமிட்டு இதுபோன்று செய்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் அவ்வூர் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள், இது தொடர்பாக பேசிய அவர்கள்,” பிரியதர்ஷினியின் சகோதரர்கள் மாற்றுக் கட்சியான திமுகவில் இருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவர் கட்சியில் சேர்ந்தார். மேலும் தனக்கு உறுப்பினர் அட்டை வேண்டும் என கேட்டதால் நாங்களே அதனை விண்ணப்பித்து பெற்றுக் கொடுத்தோம்.
திட்டமிட்டு அவதூறு:
ஆனால் சிறிது நாட்களில் அவரது செயல்பாடுகளில் மாற்றம் தெரிந்தது. நேற்று முன்தினம் தான் கட்சிக் கொடியை அவர் ஏற்றி வைத்தார். ஆனால் அடுத்த நாளே கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என கொடியை இறக்கியுள்ளதன் மூலம் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் கட்சியில் சேர்ந்து இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்” என கூறுகின்றனர்.