சென்னை: நமது நாட்டில் மிடில் கிளாஸ் மக்கள் எப்போதும் எதிர்பார்க்கும் விஷயம் என்றால் அது வருமான வரி விலக்கு உயர்த்தப்படுமா என்பது தான்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் வருமான வரி சார்ந்த சார்ந்த அறிவிப்பே அதிக கவனம் பெறும். ஆனால், பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இதற்கு நேர்மாறான ஒரு கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
பட்ஜெட் அறிவிப்பின் போது நமது நாட்டில் எப்போதுமே வருமான வரி தொடர்பாகவே அதிகம் பேசப்படும். வருமான வரி விலக்கு உயர்த்தப்பட்டுள்ளதா.. வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதா என அதுவே அதிகம் பேசப்படும்.
வருமான வரி: தற்போது நமது நாட்டில் பழைய முறை, புதிய முறை என்று இரண்டு வகையான வருமான வரி முறை இருக்கிறது. அதில் மக்கள் விரும்பியதைத் தேர்வு செய்து கொள்ளலாம். மத்திய அரசு புதிய வருமான வரி முறைக்கே அதிகபட்ச வரி விலக்கையும் அளித்துள்ளது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் வருமான வரி குறித்தும் எத்தனை சதவிகிதம் விலக்கு தர வேண்டும் என்பது குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறுகையில், "மத்திய அரசு வருமான வரி சார்ந்து புது மசோதாவை கொண்டு வருவதாகச் சொல்கிறது. அவர்கள் அதைத் தாக்கல் செய்யும் வரை அது குறித்து நம்மால் பேச முடியாது. ஆனால், இப்போது வருமான வரியில் புதிய முறையைத் தேர்வு செய்ய மக்களிடம் சொல்கிறார்கள். ஆனால், புதிய முறையில் சேமிப்புக்கு வரி விலக்கு எல்லாம் எதுவும் கிடைக்காது. ரூ. 7 லட்ச ரூபாய் வரை மட்டும் வருமான வரி கிடையாது என்கிறார்கள்.
இதில் எனது பார்வை வேறு.. நான் சொல்வதைப் பலரும் ஏற்க மாட்டார்கள். அதாவது என்னைப் பொறுத்தவரை ரூ.7 லட்சம் வரை எல்லாம் வரி விலக்கு இருக்கக்கூடாது. ரூ.4 அல்லது ரூ. 5 லட்சத்தில் இருந்தே வரி வசூலிக்க வேண்டும். ஏனென்றால் நமது நாட்டில் சராசரி மாதம் வருமானமாக ரூ.15 ஆயிரமாக இருக்கிறது. உலகின் மற்ற நாடுகளிலும் சராசரி வருமானத்தை விட 2 அல்லது 2.5 மடங்கு அதிகம் சம்பாதித்தாலே வருமான வரி வசூலிப்பார்கள்.
ரூ. 30 ஆயிரம்: நமது நாட்டில் சராசரி மாத வருமானமாக ரூ.15,000 இருப்பதால்.. அதை விட 2 மடங்கு அதாவது ரூ.30 ஆயிரம் அல்லது 3 மடங்கு அதாவது மாத வருமானம் ரூ.45 ஆயிரமாக இருப்போரிடம் இருந்து வருமான வரி வசூலிக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஆனால், மத்திய அரசு ஏற்கனவே ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் வரை இருப்போருக்கு வருமான வரி இல்லை என சொல்லிவிட்டார்கள்.
இதற்கு மேல் வரி விலக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. நாம் யாருமே வரி கட்டவில்லை என்றால் நாடு உருப்படாது. எப்போதும் பணக்காரர்களிடம் அதிக வரி வசூலிக்க வேண்டும். ஏழைகளிடம் வரி வசூலிக்கக்கூடாது. எனவே, என்னை பொறுத்தவரை மாதம் ரூ.30 ஆயிரத்திற்கு கீழ் சம்பாதிப்போருக்கு மட்டுமே வருமான வரி விலக்கு தரப்படலாம். அதற்கு மேல் சம்பளம் வாங்குவோர் நாட்டிற்கு எதாவது பங்களிக்க வேண்டும். ஆனால், அதற்கு ரொம்பவே எதிர்ப்பு வரும். இதனால் ரூ.45 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்குவோர் நிச்சயம் நாட்டிற்குப் பங்களிக்க வேண்டும்" என்றார்.
வரி முறைகள்: எந்தவொரு நாட்டிலும் வருமான வரி உட்பட நேரடி அதிகமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் பணக்காரர்களிடம் அதிக வருமான வரி வசூலிக்க முடியும். அதேநேரம் ஜிஎஸ்டி உள்ளிட்ட மறைமுக வரிகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது
Weather Data Source: Wettervorhersage 21 tage