சென்னை: லண்டனில் இருந்து திரும்பி வந்தபிறகு அண்ணாமலை, அதிமுகவை தாக்கிப் பேசாதது அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது. மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என நம்முடன் அலசுகிறார் மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே.
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபை தேர்தலை நோக்கி பரபரப்பாக தயாராகி வருகிறது. புதிதாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் களத்திற்கு வருவதால், கூட்டணிகளில் மாற்றம் ஏற்படும் என்ற பேச்சு நிலவி வருகிறது. இந்தச் சூழலில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, லண்டனில் இருந்து திரும்பி வந்த பிறகு, அதிமுகவை அதிகம் விமர்சிக்கவில்லை.
இதனால், மீண்டும் அதிமுக உடன் கூட்டணி அமைக்க பாஜக திட்டமிடுவதாக தகவல்கள் பரபரக்கின்றன. வலுவான கூட்டணியை உருவாக்கும் நோக்கில் இந்தக் கட்சிகள் சேரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நமது ஒன் இந்தியாவுக்கு மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அது இங்கே..
"பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, லண்டனில் இருந்து திரும்பி வந்தபிறகு கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார் என்பது உண்மைதான். அதிமுக மீது முன்பு காட்டிய வேகத்தை அவர் இப்போது காட்டவில்லை. திமுக மீதுதான் குறியாக தாக்குகிறார். கூட்டணி பற்றியும் திட்டவட்டமாக பேசவில்லை. அகில இந்திய தலைமையின் அறிவுறுத்தல்கள், கட்சி நிர்வாகிகளின் கருத்துகள் அவரிடையே மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
திமுகவை வீழ்த்துவது தான் ஒரே குறி என்றால் எதிர்க்கட்சிகள் யார் யார் வாய்ப்பிருக்கிறதோ அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்வது தான் நல்லது. இப்போது யார் வெல்வது என்பது முக்கியம் இல்லை, நல்லாட்சியை நாங்கள் வந்துதான் கொடுப்போம் எனக் கூறுபவர்கள் பொறுமையாக இருக்கலாம். நாம் தமிழர் கட்சியின் சீமான் அப்படித்தான் இருக்கிறார், அது வேறு கதை. பாஜக இந்த இரண்டில் எதை செய்யப்போகிறது என்பதை பார்க்கவேண்டும்.
பாஜக இன்று கூட்டணிக்கு தயாராக இருந்தாலும் அதிமுக தயாராக இல்லை. அண்ணாமலை சாஃப்டாக போனாலும், அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. அதிமுக வேறு கூட்டணியைத்தான் விரும்புகிறது. அதிமுக, கூட்டணியில் இருந்து கழற்றிவிட விரும்புகிறது என முன்பே உணர்ந்துதான், அண்ணாமலை, அதிமுகவை சீண்டிப் பேச ஆரம்பித்தார். அதிமுக எப்படியும் நம்மை கழற்றிவிட்டு விடும் என்பதை உணர்ந்துதான், அவர் முந்திக்கொண்டார். அதை பின்னர் பாஜக தலைமையும் உணர்ந்துகொண்டது.
இன்றைக்கும் அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. என்றைக்கும் பாஜக கூட்டணி இல்லை என்று அதிமுகவின் ஜெயக்குமார் கூறுகிறார். இனிமேலும், பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பில்லை. பாஜக, அதிமுகவுக்கு இணையான ஒரு போட்டியை கொண்டு வர முயற்சிக்கும். 2024 லோக்சபா தேர்தலில் 7 தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளியது போல, 2026ல் இரண்டாமிடம் பெறும் கூட்டணியை அமைக்க முயற்சிக்கும்.
முன்பு நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பெரும்பாலான பாஜக தலைவர்கள் அதிமுக உடன் கூட்டணியை விரும்பினார்கள். இந்த கூட்டணி அமையாததற்கு அண்ணாமலை தான் காரணம் என்றும் நினைத்தார்கள். இப்போது, அண்ணாமலை அமைதி காத்து, கூட்டணிக்கு வாய்ப்பிருந்தால் அமைத்துக் கொள்ளுங்கள் என சைலண்டாக சொல்கிறார். அதற்காகவே அவர் அதிமுகவை சீண்டுவதில்லை. ஆனால், 2026லும் பாஜக, ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு அதிமுக கூட்டணியில் இடமில்லை என்பதுதான் நிலைமை." இவ்வாறு தெரிவித்துள்ளார் பாண்டே.