அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளும் இனி ரூ.1000 பெறலாம்! புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்

post-img
சென்னை: உயர்கல்வி செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 நிதியை தமிழக அரசு புதுமைப்பெண் திட்டம் மூலம் வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த திட்டம் அரசு உயர்கல்வி மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. புதுமைப்பெண் திட்டம்: சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை கல்வி கற்ற பெண்களால் மட்டுமே உருவாக்கிட இயலும் என்பதற்கேற்ப, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட திட்டம்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையர் உயர்கல்வி உறுதித்திட்டம் ஆகும். நிதி உதவி: தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது. எனவே, இந்த மாணவிகளின் கல்வி தடைபடாமல், அவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. திட்டத்தில் சேர: 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளாக இருத்தல் அவசியம். அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலும். இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் RTE மூலமாக 6-ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்ற மாணவியர், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றால் இத்திட்டம் மூலம் பயனடைய முடியும். கண்காணிப்பு குழு: இத்திட்டம் தொடர்பான அனைத்து நிலைகளிலும் கண்காணித்திட மாநில அளவில் அரசு தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்களைக் கொண்டு வழிகாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆண்டிற்கு இரண்டு முறை கூடும். மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவானது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் அவர்களின் தலைமையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி இத்திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து நிலைகளிலும் கண்காணித்தல் மற்றும் மதிப்பாய்வு செய்து, மாநில அளவிலான வழிகாட்டுதல் (State Level Steering Committee) குழுவிற்கு அறிக்கையினை அளித்தல். மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமயில் மாவட்ட சமூக நல அலுவலரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். இக்குழுவானது மாதந்தோடும் கூட்டப்பட்டு இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். திட்டம் விரிவாக்கம்: இந்த திட்டம் அரசு பள்ளிகள் மட்டுமல்லாது, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் பொறுந்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுநு்தன. இப்படி இருக்கையில், கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுள்ளதாகவும், இனி உயர்கல்வி செல்லும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். டிச.30ம் தேதி இந்த விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Related Post