தரமில்லாத கட்டுமானம்.. வீடு கட்டுவோர் கவனிக்க வேண்டியவை.. கோவை நுகர்வோர் நீதிமன்றம் சூப்பர் உத்தரவு

post-img
கோவை: கட்டுமான நிறுவனங்கள் சரியான காலக்கட்டத்தில் கட்டிடம் கட்டித்தர மறுத்தாலோ, செலுத்தும் பணத்திற்கு தரமான முறையில் கட்டிடம் கட்டாமல் விட்டாலோ அவர்களிடம் இழப்பீடு பெற முடியும். கோவை தொப்பம்பட்டி கணபதி கார்டன் பகுதியை சேர்ந்த மகாஸ்ரீ என்ற பெண் கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம் தரமாக வீட்டை கட்டாததால் கட்டுமான நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களில், சேவைகளில் குறைகள் இருந்தால் நிச்சயம் அதற்காக நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு போட்டு இழப்பீடு பெற முடியும். ஓட்டலில் சாப்பாடு சரியில்லை என்றால், உணவகங்களில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்கப்பட்டால், பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நிச்சயம் வழக்கு தொடர முடியும். இதேபோல் சேவை அளிக்கும் நிறுவனங்கள் சரியாக சேவை அளிக்கவில்லை என்றாலும் வழக்கு போடலாம். உதாரணமாக நீங்கள் வாங்கிய வாகனத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டால், புதிதாகவாங்கிய ஏசி, அவர்கள் கூறியபடி இல்லாமல் அடிக்கடி பழுது ஏற்பட்டால், கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் உள்ளபடி உரிய காலத்தில் வீடுகள் கட்டித்தரவில்லை என்றால், அதேபோல் தரமற்ற வகையில் கட்டிடங்களை கட்டித்தந்தாலோ நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு நிவாரணம் பெற முடியும். அந்த வகையில் கோவை தொப்பம்பட்டி கணபதி கார்டன் பகுதியை சேர்ந்த மகாஸ்ரீ என்ற பெண் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வீடு கட்டிக்கொடுத்த நிறுவனத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "கோவை மதுக்கரை பகுதியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் வீட்டு மனை வாங்கி வீடு கட்ட ஒப்படைத்து இருந்தேன். எங்கள் வீட்டை 1,650 சதுர அடி பரப்பளவில் கட்ட மொத்தம் ரூ.40 லட்சத்து 80 ஆயிரம் அவருக்கு செலுத்தி இருக்கிறேன். ஆனால் கட்டுமானத்தை தாமதமாக நடத்தி கடந்த 2017-ம் ஆண்டு வீட்டை ஒப்படைத்தார். ஆனால் கட்டிட பணிகள் தரமானதாக இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பொருட்களை பயன்படுத்தாமல், தரம் குறைந்த பொருட்களை அவர் பயன்படுத்தியுள்ளார். 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள குடிநீர் தொட்டிக்கு பதில் 8 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள குடிநீர் தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. தரமற்ற முறையிலும், பணிகளை முழுமையாக முடிக்காமலும் வீட்டை கட்டி கொடுத்த நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மகாஸ்ரீ தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த கோவை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தங்கவேலு, உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் நேற்று உத்தரவு பிறப்பித்தனர். இதன்படி குறிப்பிட்ட கட்டுமான நிறுவனம் மனஉளைச்சலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், கோர்ட்டு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டனர்.

Related Post