சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் தமிழக அரசியல் களத்தில் அனல் தகிக்கிறது. 2026 சட்டசபை தேர்தலில் 5 முனைப் போட்டி இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரே போடாகப் போட்டார். இந்தச் சூழலில் தான் இன்று திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், "நம்மை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாகச் சேர்ந்து வந்தாலும் சரி.." என முழக்கமிட்டுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் திமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுகவை கடுமையாக விமர்சித்த கையோடு, "நம்மை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாகச் சேர்ந்து வந்தாலும் சரி, 2026 தேர்தலில் திமுக கூட்டணிதான் நிச்சயம் வெற்றி பெறும்" எனச் சூளுரைத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "சட்டமன்றத் தேர்தல் களத்தை நாம் எதிர்கொள்ள இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான் இருக்கிறது. ஏழாவது முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய இலக்கு! சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் நம் கூட்டணி வெல்லும்; 2026-இல் வெற்றி நமதுதான்! என்னுடைய இந்த நம்பிக்கைக்கு ஆணிவேர் நீங்கள்தான்! களத்தில் நாம் கொடுக்கப் போகும் உழைப்புதான், நம்முடைய வெற்றியை உறுதி செய்யப் போகிறது.
"கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை" என்று ஆணவத்தில் பேசுகிறவன் இல்லை நான்; எத்தனை படைகள் வந்தாலும், அவர்கள் எத்தனை எத்தனை பெரிய திட்டங்களோடு வந்தாலும், அவர்களின் வியூகங்களை முறியடிக்கும் கலைஞரின் படை என்னிடம் இருக்கிறது என்ற நெஞ்சுரத்தில் நான் நம்பிக்கையோடு பேசுகிறேன்.
உங்களின் உழைப்பை ஐம்பது ஆண்டுகளாகக் உடனிருந்து பார்ப்பவன் நான்! தேர்தல் என்று வந்துவிட்டால், இரவு பகல் பார்க்காமல் வேலை செய்பவன்தான் கருப்பு - சிவப்பு தொண்டன்! அசுர உழைப்பைக் கொடுத்து, வெற்றியை எட்டிப் பறிக்கிறவன்தான் தி.மு.க.காரன்! கொள்கைப் பிடிப்பிலும் சரி - கொள்கையை வென்றெடுக்க உழைப்பை கொடுப்பதிலும் சரி - நமக்கு நிகர் யாரும் இல்லை!
1957-இல் இருந்து 2024 வரை தேர்தல் களத்தில் நாம் எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை! இமயமலை போன்ற தலைவர்களில் இருந்து எத்தனையோ பேர் நம்மை எதிர்த்திருக்கிறார்கள். எதிரில் நின்றவர்கள் எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த இயக்கம் மட்டும் எப்போதும் உறுதியாக இருக்கிறது. ஏன் என்றால், இது எப்போதும் மக்களோடு இருக்கிறது. வெற்றி கிடைத்துவிட்டால் மமதையில் ஆடவும் மாட்டோம்; தோல்வி அடைத்துவிட்டால் துவண்டு உட்கார்ந்துவிடவும் மாட்டோம்!
நம்முடைய பெரிய பலமே, நம்முடைய கட்சி அமைப்புமுறைதான்! பேரறிஞர் அண்ணா உருவாக்கி, தலைவர் கலைஞர் கட்டிக்காத்த அமைப்பு முறை நம்முடையது! அதனால்தான், தலைவர் கலைஞர் உறுதியாகச் சொன்னார்: "இந்தக் கருணாநிதியின் கதை முடிந்தாலும் தி.மு.க.வின் கதை முடியாது. அந்தளவுக்குத் தி.மு.க.வின் உட்கட்டமைப்பு மிக வலிமையானது" என்று சொன்னார். அதனால்தான் எத்தனையோ முறை நம்முடைய இனப் பகைவர்கள் "ஒழிந்தது தி.மு.க" என்று குதூகலமாக எழுதியபோதும், அப்படி சொன்னவர்கள்தான் கால வெள்ளத்தில் காணாமல் போயிருக்கிறார்களே தவிர, தி.மு.க. அழியவில்லை! இன்றைக்கு வரை தமிழ்நாட்டின் முதன்மையான இயக்கமாக - இந்தியாவிலேயே 75 ஆண்டுகளைக் கண்ட ஒரே மாநில அரசியல் கட்சியாக - அதே வலிமையோடு, வீரியத்தோடு இருக்கிறோம்!
இப்போது நாம் அமைத்திருக்கும் "திராவிட மாடல்" ஆட்சியும், எளிதாக அமைந்துவிடவில்லை! நடுவில் பத்தாண்டுகள் நம்முடைய போராட்டம் எப்படிப்பட்டதாக இருந்தது? ஒருமுறை எதிர்க்கட்சியாக கூட வரவில்லை! சோர்ந்துவிட்டோமா நாம்? வீட்டுக்குள்ளேயே முடங்கி உட்கார்ந்துவிட்டோமா? இல்லையே! ஒவ்வொரு நாளும் மக்களுடனே இருந்தோம்! மக்களுக்காகக் குரல் கொடுத்தோம்! வீதி வீதியாக - வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தோம்! வீதிக்கு வந்து மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடினோம்!
புயல் - வெள்ளம் என்று எந்தப் பாதிப்பு வந்தாலும், முதல் ஆளாக ஓடிச்சென்று மக்களுக்கு உதவினோம்! இன்னும் பெருமிதத்தோடு சொல்ல வேண்டும் என்றால், கொரோனாவில் உலகமே முடங்கியபோது, வல்லரசு நாடுகளே முடங்கிக் கிடந்தபோது, லாக்டவுன் நேரத்திலும் மக்களின் தேவைகளைக் கேட்டு அறிந்து - அவர்கள் வீடு தேடிச் சென்று உதவி செய்த ஒரே இயக்கம் தி.மு.கழகம்தான்.
அதைச் சாதித்துக் காட்டியது உடன்பிறப்புகளான நீங்கள்தான். நாம் ஒவ்வொரு வீடாகத் தேடிச் சென்று கொரோனா நேரத்திலும் நிவாரண உதவிகள் செய்தோம். பதவிக்காகக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல், கடுமையான உழைப்பால் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறோம். நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து, நாள்தோறும் மக்கள் நலத் திட்டங்களைப் பார்த்துப் பார்த்துச் செயல்படுத்தி வருகிறோம்!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48, தோழி விடுதி என்று ஒரு நாள் முழுவதும் பட்டியல் போடும் அளவிலான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம்!
அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்று தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள் என்று ஓய்வில்லாமல் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்! நான் சவால்விட்டுச் சொல்கிறேன்... இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் இவ்வளவு திட்டங்களை, இந்தளவிற்குச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறதா? நிச்சயம் கிடையாது!
ஆளுங்கட்சியாக வந்ததில் இருந்து, கொரோனா, மழை வெள்ளம் என்று எத்தனையோ நெருக்கடிகளை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு மக்களைக் காப்பாற்றி இருக்கிறோம். ஒரு நாள்கூட ஆளுங்கட்சியாக நாம் 'ரிலாக்சாக' இருந்ததில்லை! எவ்வளவு நெருக்கடியில் ஆட்சிக்கு வந்தோம். பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியின் இருட்டில் இருந்து மீட்டெடுப்பதே நமக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டை எப்படியெல்லாம் பின்னுக்குத் தள்ளலாம் என்று யோசித்து அனைத்து வகையிலும் நெருக்கடி தரும் பா.ஜ.க.வை சமாளிக்கிறோம்!
வெறும் தமிழ்நாட்டோடு நம்முடைய எல்லையைச் சுருக்கிக் கொள்கிற மாநிலக் கட்சி அல்ல தி.மு.க.! இந்தியா முழுவதும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு அதற்காகவும் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்! இப்படி கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஓயாமல் உழைக்கும் நமக்கு உற்சாகத்தைத் தருவது எது? தொடர் வெற்றிகள்தான்! அந்த வெற்றிக்கு காரணம், தமிழ்நாட்டு மக்களும், நம் கூட்டணி கட்சித் தோழர்களும்தான்!
2019-இல் கொள்கைக் கூட்டணியாக சேர்ந்தோம்; தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் என்று அனைத்திலும் வெற்றிதான்! இந்த வெற்றிகள் மூலம் என்ன செய்கிறோம்? நாடு - நாட்டு மக்கள் - நாட்டின் பன்முகத்தன்மை - நம் மொழி, பண்பாடு - மதச்சார்பின்மை - இவற்றைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டம் - இதையெல்லாம் காக்கும் ஜனநாயக அரணாகத் தொடர்ந்து செயல்படுகிறோம்! அதனால்தான் இந்த கொள்கைக் கூட்டணிக்கு எதிராகப் பலரும் அரசியல் கணக்கு போடுகிறார்கள்! நான் உறுதியாகச் சொல்கிறேன்... நம்முடைய கொள்கைக் கூட்டணிக்கு எதிராக அவர்கள் போடும் கணக்கெல்லாம் தப்புக் கணக்காகத்தான் ஆகும்! வெற்றிக் கணக்கு நம்முடைய கூட்டணிக்குத்தான்.
நம்மை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாகச் சேர்ந்து வந்தாலும் சரி, 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும்! அதுவும் சாதாரண வெற்றி அல்ல, சரித்திர வெற்றி பெறுவோம்! தலைவரே சொல்லிவிட்டார்... வெற்றி சுலபமாக வந்துவிடும் என்று யாரும் மெத்தனமாக இருக்கக் கூடாது! 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அது எளிமையாக வராது! அதற்கு, இங்கு இருக்கும் அனைவரும் ஒரு உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும்!
"200 தொகுதிகளில், என்னுடைய சட்டமன்றத் தொகுதி முதலாவதாக இருக்க வேண்டும், என் தொகுதிதான் அதிக முன்னிலை பெற்ற தொகுதி என்று வர வேண்டும், என் மாவட்டத்தில், என் மாநகராட்சியில், என் ஒன்றியத்தில், என் பகுதியில், என் பேரூரில், என் ஊராட்சியில், என் வார்டில்தான் அதிக முன்னிலை வாங்கியது" என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்!
நான் மேடைக்கு மேடை நம்முடைய திட்டங்களைப் புள்ளி விவரங்களோடு சொல்கிறேன்... மக்களுக்குத் தெரியுமே என்று எடுத்துச் சொல்லாமல் நாம் அமைதியாக இருந்துவிடக் கூடாது! நமக்கு எதிராக நம்முடைய எதிரிகள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் - பொய்ச் செய்திகள்! அவதூறுகள்! இதற்கு எதிரான நம்முடைய ஆயுதம் - நம்முடைய ஆட்சியின் சாதனைகளும், நம்முடைய கொள்கைகளும்தான்! நம்முடைய சாதனைகளைத் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொடுவது போன்று உங்கள் பாணியில் சொல்லுங்கள்...
களப்பணிக்கு, கழகப்பணிக்கு, வெற்றிப்பணிக்குத் தொண்டர்களைத் தயார்படுத்த வேண்டிய பணியை, செயற்குழு உறுப்பினர்களான நீங்கள் இன்றைக்கே தொடங்க வேண்டும்! 75 ஆண்டுகள் கடந்துவிட்ட நம் இயக்கத்தை ஏழாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க வைக்க உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்!
திராவிட முன்னேற்றக் கழகம், மக்களுக்கான இயக்கம்! அதிலும் எளிய மக்களின் உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்ட இயக்கம். கொள்கைப் பிடிப்போடு மக்களுக்காக உழைக்கிறவர்கள்தான் இந்த இயக்கத்துக்கு தேவை! என்னுடைய அறிவுரைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
திரும்பத் திரும்ப நான் இதையெல்லாம் சொல்லக் காரணம்... வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில் நாம் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம்! பொய்ப் பரப்புரைகள், அவதூறுகளைப் புறந்தள்ளி நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நமக்கு வெற்றிய வழங்கியிருக்கிறார்கள்! அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று துடித்தவர்களுக்கு இந்தியா கூட்டணி மூலம் ஜனநாயகக் கடிவாளம் போட்டிருக்கிறோம்! அதுதான் நம்முடைய இயக்கத்துக்கும் - உங்களுக்கும் - எனக்குமான பெருமை!
அடுத்து, கொஞ்சம் நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒரு வாக்கு சதவிகிதக் கணக்கை சொல்கிறார்! அம்மையார் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திருவாளர் குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சுவது போன்று அது இருக்கிறது. 'காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டும்' பழனிசாமி - "கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வாக்கு சதவீதம் 1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது" என்று உளறி இருக்கிறார். இல்லாததை இருப்பதுபோல் ஊதிப் பெருக்கிக் காட்டுவது பழனிசாமிக்குக் கைவந்த கலைதான்...
2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 19.4 விழுக்காடு வாக்குகளை வாங்கியது. இதுவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டும் வெறும் 20.4 விழுக்காடு வாக்குகளைத்தான் வாங்கியிருக்கிறது. 14 தொகுதிகளில் அதிகமாகப் போட்டியிட்ட அ.தி.மு.க. நியாயமாகப் பார்த்தால் 32.98 விழுக்காடு வாக்குகளை 2024 தேர்தலில் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், அதைவிட 12.58 விழுக்காடு வாக்குகள் குறைவாகத்தான் வாங்கியிருக்கிறது. எளிமையாகச் சொன்னால், 2019-இல் சராசரியாக ஒரு தொகுதிக்கு 4.16 லட்சம் வாக்குகள் வாங்கிய அ.தி.மு.க. - 2024-இல் வெறும் 2.61 லட்சம் வாக்குகள்தான் வாங்கியிருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1.5 லட்சம் வாக்குகளை இழந்திருக்கிறது பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இப்படி, மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட பழனிசாமி, அ.தி.மு.க. தொண்டர்களுக்குச் சாதாரண கூட்டல் - வகுத்தல் கணக்கே தெரியாது என்று நம்பிப் பொய்க் கணக்கை அவிழ்த்துவிட்டிருக்கிறார். அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அ.தி.மு.க.காரர்களே கேட்டு சிரிக்கிறார்கள்.
கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பா.ஜ.க.வைக் கண்டித்தாரா? புரட்சியாளர் அம்பேத்கரைக் கொச்சைப்படுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகக் கீச்சுக்குரலிலாவது கத்தினாரா? பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு அவருக்கு இருக்கிறதா? கிடையாது. தி.மு.க. என்றால் மட்டும் சட்டமன்றத்திலும், வெளியிலும் கத்திப் பேசுகிறார். கத்திப் பேசினால் தன்னை ஜெயலலிதா என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறார். எம்.ஜி.ஆர் போல் தன்னுடைய கட்சிக்காரர்கள் அவரை நினைப்பார்கள் என்று நம்புகிறார். பழனிசாமி அவர்கள் என்னதான் கத்தினாலும் எப்படித்தான் கதறினாலும் அவருடைய துரோகங்களும் குற்றங்களும்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.
துரோகத்தைத் தவிர உங்களுக்குப் பெருமையாகச் சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது? தி.மு.க.வின் வரலாறு தியாகம். பழனிசாமியின் வாழ்க்கை முழுவதும் துரோகம். அவர், பாதம்தாங்கி பழனிசாமி மட்டுமல்ல; பயந்தாங்கொள்ளி பழனிசாமி!
இவர்கள் கள்ளக் கூட்டணியாக வந்தாலும் சரி, நேரடிக் கூட்டணி அமைத்து வந்தாலும் சரி, தமிழ்நாட்டுக்கும், தமிழினத்துக்கும் இவர்கள் பேராபத்தானவர்கள் என்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்! நாம் ஏன் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று சொல்கிற அதேநேரத்தில் - யார் ஆட்சிக்கு வரக் கூடாது; ஏன் அவர்கள் வரக் கூடாது என்றும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்!
அ.தி.மு.க. - பா.ஜ.க. - புதிது புதிதாக முளைக்கும் கட்சிகளுக்கு கிடைக்கும், ஊடக சொகுசு நமக்கு ஒருபோதும் கிடைக்காது! இது இன்று நேற்றல்ல... 75 ஆண்டுகளாக நாம் எதிர்கொள்ளும் சவால். அந்த சவாலையும் சாதனையாக்கித்தான் இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது. நம்முடைய சொல்லாற்றல் - எழுத்தாற்றல் - மக்கள் நலன் ஆகியவற்றை நம்பித்தான் நாம் செயல்பட வேண்டும்!
நம்மை எதிர்ப்பவர்கள் அனைவருமே நமக்கு எதிரியாக இருக்கத் தகுதியுடையவர்கள் இல்லை; தங்களுக்குக் கவனம் கிடைக்க வேண்டும் என்று ஆர்வக் கோளாறில் நம்மை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள்! அவர்களின் கவனச் சிதறல்களுக்கு ஆளாகிவிடாதீர்கள்... உண்மையான எதிரிகளை வீழ்த்த உங்கள் ஆற்றலைச் செலவிடுங்கள்! தேர்தலை எதிர்கொள்ள வியூகம்தான் அவசியம்.
எனவே, சில அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் இந்தத் தருணத்தில் வழங்க விரும்புகிறேன். மகளிரிடம் நம்முடைய ஆட்சி மேல் பெரும் நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் நம்முடைய ஆட்சி மேல் பெரிய மதிப்பு வைத்திருக்கிறார்கள். அதை முழுமையாக நமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்ற வேண்டும்! புதிய வாக்காளர்களான இளைஞர்களின் நம்பிக்கையையும் - மனதையும் வெல்ல வேண்டும்! அதற்கு, அவர்களுக்கான மொழியில் பேச வேண்டும்! தொடர்ந்து டிரெண்ட்-இல் இருக்க வேண்டும்!
திராவிட இயக்கத்தால் கடந்த 75 ஆண்டுகளில் தமிழ்நாடு எப்படி முன்னேறி இருக்கிறது, ஒவ்வொரு குடும்பத்திலும் எப்படிப்பட்ட மாற்றத்தை இது கொண்டு வந்திருக்கிறது என்று இளம் தலைமுறையினரிடம் கொண்டு போக வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஊடகமாக மாற வேண்டும்! தி.மு.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் தொண்டர்கள் ஒவ்வொருவர் முன்பும் இருக்க அடிப்படைக் கடமை இது.
கழகத்துக்குப் பவள விழா கொண்டாடி இருக்கோம்! வெள்ளி விழா - பொன் விழா - பவள விழா கண்டபோதெல்லாம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இந்த இயக்கம், நூற்றாண்டு காணும்போதும், ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும்! இருக்கும். அதுதான், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!
தமிழ்நாட்டின் வரலாற்றில் சோழர்கள் ஆட்சியை பொற்காலம் என்று சொல்வார்கள். எதிர்காலத்தில் எழுதப்போகும் வரலாற்றில், மக்களாட்சி மலர்ந்த பிறகு அமைந்த ஆட்சிகளில் தி.மு.க.வின் ஆட்சிக்காலம்தான் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று சொல்ல வேண்டும்! தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தவர்கள் இந்த கருப்பு - சிவப்புக்காரர்கள் என்று சொல்ல வேண்டும்! நம் முழக்கம், வெல்வோம் 200! படைப்போம் வரலாறு! வெல்வோம் 200! படைப்போம் வரலாறு!" எனத் தெரிவித்துள்ளார்.