சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவரை கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது. அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தது அமலாக்கத் துறை. அதன்பின் ஆகஸ்ட் 12ஆம் தேதி 124 பக்க குற்றப்பத்திரிகை மற்றும் 3,000 பக்கங்களுக்கும் மேலான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தது.
இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது. செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இழுத்தடிக்கப்படும் ஜாமீன் மனு: இந்த ஜாமீன் மனுவை, 'சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வாருங்கள்' என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் இன்று முறையிடப்பட்டது. அப்போது நீதிபதி, ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என தெரிவித்துவிட்டார்.
உடனடியாக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கறிஞர்கள் நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் நீதிபதி, "அமலாக்கத்துறை வழக்கில் தாக்கல் செய்யபட்ட ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரவும்" என தெரிவித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தை நாட உள்ளது.
அண்ணாமலை திட்டவட்டம்: இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்துப் பேசியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "அமலாக்கத்துறை வழக்குகளைப் பொறுத்தவரை ஜாமீன் கிடைக்க வாய்ப்பு குறைவு. சாதாரண வழக்குகளில் வரக்கூடிய பெயிலுக்கும், அமலாக்கத்துறை வழக்குகளில் வரும் பெயிலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சாதாரண வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அமலாக்கத்துறை வழக்குகளைப் பொறுத்தவரை சட்டங்களே கடுமை தான். அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையில் ஏராளமான ஆதாரங்களை கொடுத்திருக்கிறார்கள். இனி குற்றப் பத்திரிக்கையை வைத்துத்தான் ஜாமீன் பற்றி முடிவு எடுக்கப்படும். அதிலும் எலெக்ட்ரானிக் எவிடென்ஸ், அக்கவுண்டுக்கு பணம் வந்தது போன்றவற்றை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி வெளியே வந்தால் அழிக்க வாய்ப்பு அதிகம்.
வாய்ப்பு ரொம்ப கம்மி: இது எல்லாவற்றையும் நீதிமன்றம் கணக்கில் எடுக்கும். மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் என இந்தியாவில் பல வழக்குகளில் அமலாக்கத்துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு, ஆதாரங்களை அவர்கள் அழிக்க முடியும் என்றால் ஜாமீன் கிடைக்காது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு" எனத் தெரிவித்துள்ளார்.