ஈரோடு: சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவில் ஏற்பட்ட தகராறில், பாஜக நிர்வாகி கைதாகி உள்ளார்.. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி ஹரிஹரன் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் செயல்பட்டு வருகிறது அந்த தனியார் சிபிஎஸ்இ பள்ளி.. இங்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு விழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளது..
சிறப்பு விருந்தினர்: இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நபர், பைபிள் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறார்.. இந்த விஷயம், ஈரோடு வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி செயலாளர் ஹரிஹரனுக்கு தெரியவந்துள்ளது..
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி குறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டதாக தெரிகிறது. அத்துடன் தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு, அந்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
சத்தியமங்கலம்: இதையடுத்து, அப்பள்ளி நிர்வாகமானது, புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் அளித்தது. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பாஜக நிர்வாகி ஹரிஹரனை கைது செய்து, சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.
இப்போது இந்த வழக்கில் தொடர்புடைய பாஜ வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சின்னராஜ், பவானிசாகர் மண்டல தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மண்டல தலைவர் தங்கமணி, வர்த்தக அணி மாவட்ட தலைவர் சந்திரசேகர், மண்டல பொதுச்செயலாளர் சதீஷ்குமார், இளைஞர் அணி மண்டல தலைவர் ரகு சூர்யா, ஆறுமுகம் ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை தேடி வருவதாக போலீசார் கூறுகிறார்கள்.
கிறிஸ்தவ பள்ளிகள் மதம் மாற்றும் கேந்திரங்களாக மாறிவிட்டன என்றும், தமிழகத்தில் உடனடியாக மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், பள்ளியில் பைபிள் வாசகம் தரப்பட்டதாக கூறப்படுவது பாஜகவுக்கு மேலும் கொதிப்பை தந்துவருகிறது.
ஈரோடு: அதுமட்டுமல்ல, விரைவில் ஈரோடு இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக இங்கு போட்டியிடும் என்று சொல்கிறார்கள்.. இன்றுகூட, பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, நிச்சயமாக நாங்களோ அல்லது எங்களது கூட்டணி கட்சியோ தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், சத்தியமங்கலம் பாஜக பிரமுகர் கைதாகி சிறை சென்றிருப்பது பரபரப்பை தந்து வருகிறது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.