சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பின் முக்கியமான சில திட்டமிடல் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் 234 தொகுதிகளிலும் ஜனவரி இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம். அஇஅதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும்; உறுதியாக, அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும், என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கழக ஆட்சியின்போது குடிமராமத்துத் திட்டம். தடுப்பணைகள் திட்டம், அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீரை சேமிக்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டதை. விடியா திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தத் தவறியதற்கு கண்டனம். கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையையும், சம வாய்ப்புகளையும் வழங்கிடும் வகையில், சாதிவாரி கணக்கெடுப்பினை எடுக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
இந்த கூட்டத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ரெடியாகிவிட்டார் என்று செய்திகள் வருகின்றன. அதாவது 2026 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே கூட்டணி வைப்பதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி செய்ய தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
டெல்லியுடன் நெருக்கம்: அதன்படி எடப்பாடி பழனிசாமி பெரும்பாலும் மீண்டும் என்டிஏ கூட்டணியை தமிழ்நாட்டில் உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பாஜக, பாமக , தேமுதிக, புதிய தமிழகம் உடன் மீண்டும் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது என்டிஏ கூட்டணி மீண்டும் உருவாக்கப்படலாம்.
ஆனால் இதற்கு அண்ணாமலை முட்டுக்கட்டை போட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அண்ணாமலை திரும்பி வந்த பின் பெரியதாக கருத்துக்கள் எதையும் தெரிவிக்காதது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் தலைவர் பதவியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை மனதில் வைத்தே 2026 சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
விஜய்க்கு இல்லை: இந்த கூட்டணியில் கண்டிப்பாக விஜய்க்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் விஜய் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டார். அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்ற செய்தி உண்மைக்கு முற்றிலும் புறம்பானது முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது என்று தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது .
அதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது, என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் என்டிஏ கூட்டணியை உருவாக்குகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.