சென்னை: ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கருவறையில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க மாட்டேன் என்று இளையராஜா கூறினாரோ அதே தந்தை பெரியாரின் 'கருவறை நுழைவுக்கான' வாழ்நாள் உரிமைப் போராட்டத்தை தாம் எதிர்கொண்ட அவமானத்தின் மூலம் நினைவுகூர வைத்திருக்கிறார் என்கின்றனர் பெரியாரிஸ்டுகள்.
இசை உலகின் ஜீவனாக, ஆன்மாவாக உருவெடுத்து நிற்கிறார் இசைஞானி இளையராஜா. ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனதை வருகிற, உள்ளத்தை ஆற்றுப்படுத்துகிற, கொண்டாட்டங்களை ஆராதிக்கிற ஆகப் பெரும் இசையை வழங்கிய இசைஞானியை நாம் அனைவருமே கொண்டாடுகிறோம்.. ஆனால் அவரை கொண்டாடும் பெரும்பான்மையினரையும் பெரும்பான்மையினரின் நம்பிக்கைகளையும் ஒருவகை உதாசீனப்படுத்துதலுடன் கை விட்டுவிட்டு வேறு ஒரு பிரிவினரின் ஆன்மீக நம்பிக்கைகளை கொண்டாடியவர் இளையராஜா.
அப்படி இளையராஜா கொண்டாடிக் கொண்டே இருந்தாலும் அவரை குறிப்பிட்ட பிரிவு சீண்டிக் கொண்டுதான் இருக்கிறது. இளையராஜா போன்ற இந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு இந்த நிலத்தில் அனைத்து வகை உரிமைகளும் இருக்க வேண்டும் என போராடியவர் தந்தை பெரியார். கடவுள் இல்லவே இல்லை என்று இறை மறுப்பு பிரசாரம் செய்த பெரியார் இன்றைக்கும் அலை அலையாக கோவில்களில் குவிகின்ற தமிழ்நாட்டு மக்களால் தந்தை பெரியார் என கொண்டாடப்படுகிறார்.. ஏனெனில் அவர் முன்வைத்த இறை மறுப்பு கொள்கை என்பதே இந்த மண்ணின் மக்களுக்கான வாழ்வுரிமைக்கானது என்பதை உணர்ந்து கொண்டதால்.. பெரியாரின் போராட்டங்களால் இடஒதுக்கீடு, வாழ்வுரிமை பெற்றுள்ளோம் என்பதை புரிந்து கொண்டதால்தான்.
ஆனால் இசை உலகில் உச்சம் தொட்ட இளையராஜாவுக்கு மட்டும் எப்போதும் பெரியார் ஆகாத ஒருவர்தான். சென்னையில் உள்ள தந்தை பெரியார் திடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா, பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க மறுப்பு தெரிவித்து அவமரியாதை செய்தார்; தங்களது தந்தை பெரியாரை அவமதித்த இளையராஜாவை தமிழ்ச் சமூகம் விமர்சித்ததே தவிர அவமதித்தது இல்லை. தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்று படத்துக்கு இசையமைக்க மறுத்துவிட்டதாக இயக்குநர் ராஜசேகரன் விமர்சித்த போது, இளையராஜாவை கோபத்துடன் பார்த்த தமிழ்நாட்டு மக்கள் தம் இசை மகனை அவமதித்துவிடவில்லை. தந்தை பெரியாரை நாளும் போற்றுகிற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இளையராஜாவின் திருவாசகம் இசைவெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நின்று விசிலடித்து கை தட்டியதை இன்னமும் மறக்கவில்லைதான் தமிழ்நாடு.
கோவில்களே கூடாது என்ற பெரியார் கோவிலில் அனைத்து ஜாதி மக்களும் வழிபாடு நடத்த உரிமை வேண்டும் என்றார்; கோவிலே கூடாது என்ற பெரியார்தான் கோவில்களில் அனைத்து ஜாதி மக்களும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்றார். இதில் தமிழ் ஜாதி மக்களுக்கு எந்த சிக்கலும் இல்லை; ஆனால் பிற மண்ணில் இருந்து இங்கே வந்து தமிழ் ஜாதியாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் வேற்றினத்தாருக்குதான் ஆகமம் கெட்டுடுத்து என்ற வியாதி தொற்றிக் கொண்டது. இந்தப் போராட்டங்கள் கூட இளையராஜாவுக்கு இன்று வரை ஒவ்வாமையாக இருந்திருக்கலாம்..
ஆனால் இப்போது ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கருவறையில் இருந்து கழுத்தை பிடித்து வெளியேற்றாத குறையாக அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் இளையராஜா. இப்போதும் இளையராஜா எனும் மகத்தான தமிழ் மகனுக்காக பெரியாரிஸ்டுகளும் இடதுசாரிகளும் இந்த தமிழ் மக்களும்தான் கொந்தளிக்கிறார்... அன்றே பெரியார் குரல் கொடுத்ததும் இந்த உரிமைக்குதானே 'சாமீ' இளையராஜா என அவரிடம் புரியவைக்கவும் போராடுகின்றனர்.. பெரியாரை புறக்கணித்த இளையராஜாவுக்கு இதுவும் வேண்டும் என்றெல்லாம் அவரை நிந்திப்பாரும் இல்லாமல் இல்லை.. இப்போதும் இளையராஜா இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் நித்தம் நித்தம் இப்படித்தான் ஆதிக்க இனத்தாரால் அடக்கப்படுகின்றனர்; ஒடுக்கப்படுகின்றனர் என்பதை புரிந்து கொண்டு, மக்கள் உரிமைகளை மதிக்கக் கூடிய மகத்தான இசைக் கலைஞராக தம்மை உருமாற்றிக் கொள்ள வேண்டும்.. என்னதான் எம்பி பதவி கொடுத்து நாடாளுமன்றத்தில் அமர வைத்தாலும் ஏன் ஜனாதிபதியே ஆனாலும் 'நம்ம மக்களுக்கு' 'நமக்கு' ஏற்பட்ட அவமானம் நீடிக்கிறதே என்கிற குமுறலையும் கோபத்தையும் இனியேயும் 'இளையராஜா'வும் 'இளையராஜா'க்களைப் போல இருக்கிறவர்களும் வெளிப்படுத்துவதுதான் சமூகக் கடமை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.