காஞ்சிபுரம்: விஜய் கட்சியில் ஆரம்பத்தில் இருந்து உழைத்தவர்களுக்கு மட்டும் தான் பதவி, பெரிய பெரிய காரில் வருபவருக்கு கிடையாது என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாலர் புஸ்ஸி ஆனந்த் உறுதி அளித்துள்ளார். அதுபோல் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் விஜய்யை முதல்வராக்குவோம் என்றும் அவர் சூளுரைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாகரல் ஊராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எஸ்.கே.பி.தென்னரசு தலைமையில் கட்சியினருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விஜய் ரசிகர் மன்றம் கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. உத்திரமேரூர் கிராமத்தில் ஏழை மூதாட்டி ஒருவருக்கு இலவச வீடு வழங்கப்பட்டது. பின்னர் தையல் இயந்திரங்கள், சைக்கிள், சலவை பெட்டிகள் மகளிர்க்கு அன்றாட தேவையான மளிகை பொருட்கள் ஆகியவைகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.
பின்னர் புஸ்ஸி ஆனந்த் பேசும் போது, ஆரம்பத்தில் இருந்து உழைத்தவர்களுக்கும், சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டியவர்களுக்கும் தான் தமிழக வெற்றி கழகத்தில் பதவி வழங்கப்படும், பெரிய பெரிய காரில் வருவோருக்கு பதவிகள் வழங்கப்படாது.
புதிதாக கட்சியில் இணைபவர்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும். பாகுபாடு பார்க்க கூடாது என முரண்பாடான இருவேறு கருத்துக்களை புஸ்ஸி ஆனந்த் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில் கட்சித் தொண்டர்கள் கடன் வாங்கி எந்த செலவும் செய்யக் கூடாது, 20 லட்சம் ரூபாய் வரை கட்சியின் பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏற்பாடு செய்து தான் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்றார்.
அதாவது கட்சியிலிருந்து ஒரு பைசா கூட கொடுக்கவில்லை என்ற தொனியில் மாற்றி மாற்றி பேசினார். வருகின்ற 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் அவர்களை வெற்றி பெற செய்து முதல்வர் சீட்டில் அமர வைக்க வேண்டும். அதனால் பொதுமக்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை என அறிந்து செய்ய வேண்டும். கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என புஸ்ஸி ஆனந்த் பேசினார்.
செய்தியாளர்கள் பேட்டி கேட்டதற்கு வேண்டாம் என கூறிவிட்டு மேடையில் இருந்து கீழே குதித்து வேகமாக நடையை கட்டினார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கி 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலே தனது இலக்கு என அறிவித்தார். 234 தொகுதிகளிலும் தவெக போட்டியிடும் என தெரிவித்திருந்தார்.
அண்மையில் அக்டோபர் 27-ஆம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தனது முதல் எதிரி திமுகதான் என விஜய் அறிவித்திருந்தார். அது போல் பாஜகவையும் லேசாக தொட்டுவிட்டுச் சென்றார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை நிலச்சரிவு, பல்லடம் மூவர் கொலை உள்ளிட்ட விவகாரங்களுக்கு தமிழக அரசை விமர்சித்திருந்தார். அவ்வப்போது தமிழகத்தில் நடக்கும் குற்றங்களின் போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக விஜய்யும் விமர்சித்து வந்தார். எனினும் விஜய் சாமானிய மக்களால் அணுக முடியாதவர் என்றும் விக்கிரவாண்டி பொதுக் கூட்டத்திற்கு பிறகு அவரை பொதுவெளியில் பார்க்க முடியவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் சென்னையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட டிபி சத்திரம் பகுதியை சேர்ந்த 300 பயனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி, உடை உள்ளிட்டவற்றை பனையூர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து விஜய் வழங்கியிருந்தார். பாதிக்கப்பட்ட பகுதிக்கே சென்று வழங்காமல் தனது இடத்திற்கு வரவழைத்துள்ளாரே, ஏன் நேரடியாக அவரால் செல்ல முடியாதா? இதிலிருந்தே விஜய் அணுக முடியாதவர் என தெரிகிறது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.
இந்த நிலையில் தான் ஏன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் வரவில்லை என்பதை அந்த மக்களிடமே விஜய் தெரிவித்தாராம். "நான் நேரில் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழும். உங்களிடம் இது போல் சாவகாசமாக பேச முடியாது. அதனால்தான் உங்களை என் இடத்திற்கு வரவழைத்துள்ளேன் என்னை தவறாக நினைக்காதீர்கள் என தெரிவித்திருந்தார்.