கடந்த மாதம், சமையல் எண்ணெய் விலை குறைந்ததாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது.. உக்ரைனில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றுமதி மறுபடியும் ஆரம்பமானதால், இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் விலை கணிசமாக குறைந்தது.
எண்ணெய் விலை: இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய்யின் விலை 46 முதல் 57 சதவீதம் வரை குறைந்தது.. இதன்காரணமாக, இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைந்தது.. அதுவும், கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு விலை குறைந்தது..
SEAI அதாவது, சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தரவுகளின்படி, இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சூரியகாந்தி எண்ணெய்யின் விலை இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சோயாபீன்ஸ் மற்றும் பாமாயிலை விடக் குறைவாக இருந்தது.. எனினும், சர்வதேச விலை குறைந்தாலும், சில்லறை விலை அந்த அளவிற்கு குறையவில்லை என்பதால், விலை குறைப்பின் முழு பலனையும் நுகர்வோர் பெறவில்லை என்றும் சொன்னார்கள்.. மேலும், இந்த விலை குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இன்னும் சில வாரங்கள் ஆகும் என்றும் நிபுணர்கள் காரணம் கூறியிருந்தனர்.
மத்திய அரசு: இந்நிலையில், இன்னொரு அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.. சமையல் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவை நுகர்வோருக்கு விரைவாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் கீழ்நோக்கிய போக்கிலேயே இருந்துவரும் நிலையில், இந்தியாவில் சமையல் எண்ணெய் துறையில் சாதகமான சூழ்நிலையை அளித்து வருகிறது..
உலகளாவிய விலை வீழ்ச்சிக்கு மத்தியில் சமையல் எண்ணெய்களின் சில்லறை விலையை மேலும் குறைப்பது குறித்து ஆலோசிக்க, முன்னணி தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனையை, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் மேற்கொண்டுள்ளார்.
சில்லறை சந்தை: பின்னர் இதுகுறித்து அவர் சொல்லும்போது, "கடந்த 2 மாதங்களில் சமையல் எண்ணெய்களின் உலகளாவிய விலைகள் ஒரு டன்னுக்கு 200-250 அமெரிக்க டாலர்கள் வரை குறைந்துள்ளது.. ஆனால் சில்லறை சந்தைகளில் இது அவ்வளவாக பிரதிபலிக்கவில்லை.. இதற்கு காலதாமதமும் ஆகிறது... அதனால், சில்லறை விலைகள் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை, நாட்டில் சமையல் எண்ணெய்களின் விலைகளை உன்னிப்பாகக் கண்காணித்து ஆய்வு செய்து வருகிறது. மனித உணவின் முக்கிய அங்கமாக இருக்கும் சமையல் எண்ணெய்களின் மலிவு விலையை உறுதி செய்ய ஏதேனும் தலையீடு தேவைப்படும்போதெல்லாம் மத்திய அரசும் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது.
விலை வீழ்ச்சி: இப்போது சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது.. உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை வீழ்ச்சி படிப்படியாக உள்நாட்டு சந்தையில் எதிரொலித்து வருவது நுகர்வோருக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளித்து வருகிறது" என்றார்.
2 நாட்களுக்கு முன்பு, தொழில்துறை பிரதிநிதியினருடன், மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தலைமையில் விலை குறைப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது... இந்த கூட்டத்திற்கு பிறகு, உணவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியாகி இருந்தது.. அந்த அறிக்கையில் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றையும் வழங்கியிருந்தது:
விலை குறைப்பு: "சில சமையல் எண்ணெய் நிறுவனங்கள், தங்கள் எண்ணெய்களின் விலையை குறைக்காமலும், பிற பிராண்டுகளின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட அதிகமாகவும் விற்பனை செய்து வருகின்றன... உற்பத்தியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களுக்கான விலையை அவை உடனடியாக குறைக்க வேண்டும். விலை குறைப்பினால் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது.... உற்பத்தியாளர்கள், சுத்திகரிப்பாளர்களால் வினியோகஸ்தர்களுக்கு விலை குறைப்பு ஏற்படும் போதெல்லாம், அதன் பயன் வாடிக்கையாளர்களை சென்று சேர வேண்டும்..
அறிவுறுத்தல்: மேலும், இந்த நடவடிக்கை குறித்து அமைச்சகத்திற்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும். உலகளவில் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், முக்கிய சமையல் எண்ணெய்களின் விலையை 8 - 12 ரூபாய் வரை உடனடியாக குறைப்பதை உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.