திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் குப்பையில் கிடந்த 292 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் தீவிர விசாணை நடத்தினார்கள். குப்பையில் கிடந்தவை திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ரேஷன் கார்டுகள் என்பது தெரியவந்தது. கடந்த 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் என்பதும் தெரியவந்துள்ளது.
ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம்பருப்பு மற்றும் பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு குடும்ப அட்டை வேண்டும். குடும்ப அட்டை இருந்தால் தான் மகளிர் உரிமை பெற முடியும். இதேபோல் அரசு தரும் பல்வேறு
நிவாரண உதவிகளையும் பெற முடியும்.. குடும்ப அட்டை பெற வேண்டும் என்றால், அதற்கு வருவாய்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். நீண்ட செயல்முறைக்கு பிறகே குடும்ப அட்டைகள் கிடைக்கும்.
இந்த சூழலில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் உள்ள காட்டுப்பகுதியில் குப்பைகள் போடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று அங்கு குப்பை போடச்சென்ற சிலர் குவியல் குவியலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கிடப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள். இதுகுறித்து நாராணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த நாராணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் அம்பிகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அங்கு குப்பைகளில் போடப்பட்ட தமிழ்நாடு அரசின் 292 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கைப்பற்றினார்கள்.அந்த கார்டுகள் திருப்பூர் தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த குடும்ப அட்டைகள் என்பது தெரியவந்தது. கடந்த 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் என்பது தெரியவந்தது. இந்த அட்டைகள் எப்படி வந்தது என்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்து பெறுவது என்பது எளிதானது அல்ல என்கிற நிலையில், சுமார் 292 பேருக்கு குடும்ப அட்டைகள் தராமல் குப்பையில் வீசப்பட்டது ஏன் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குடும்ப அட்டைகள் பல்லடம் பகுதியில் உள்ள குப்பை தொட்டிக்கு எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பல்லடம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.