கிராமங்களுக்கு அதிவேக இண்டெர்நெட்.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்.. இனி நெட் பிரச்சினையே இருக்காது

post-img

சென்னை: நகர்புறங்களில் இருப்பது போலவே அதிவேக இண்டெர்நெட் சேவையை கிராமப்புறங்களில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 950 கிராமங்களில் பைபர்கேபிள்கள் பொருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் கூடிய விரைவில் இந்த சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சிட்டியில் இருப்பது போலவே கிராமங்களிலும் அதிவேக இணைய சேவையை பெறமுடியும்.
இன்றைய கால கட்டத்தில் மக்களின் அத்தியாவசிய பயன்பாடுகளில் ஒன்றாக இணைய சேவை மாறிவிட்டது. அரசின் சேவைகள் முதல் டிக்கெட் புக்கிங், வங்கி பணிகள் என பெரும்பாலான பணிகளை இணைய சேவை இருந்தால் வீட்டில் இருந்தே பெற்று விடலாம். இதனால், நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் இண்டெர்நெட் சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இணைய சேவையை பொறுத்தவரை நகரங்களில் கிடைக்கும் அதே வேகத்தில் கிராமப்புறங்களில் கிடைப்பது இல்லை. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மக்களின் இந்த சிரமங்களை தவிர்க்கும் விதமாக சூப்பர் திட்டம் ஒன்றை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவையை முதல்கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழக அரசு வழங்க திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள செல்போன் டவர்கள் மூலம் தான் இண்டெர்நெட் வசதியை பெறுகிறார்கள். நகரங்களில் கிடைப்பது போல அதிவேகத்தில் இந்த சேவையை கிராமங்களில் பெற முடியாது. கிராமங்களை பொறுத்தவரை இணையதளத்தின் வேகம் மிக குறைவாகவே இருக்கும். அதிகபட்சமாக 10 மெகாபைட்ஸ் என்ற ஸ்பீடு தான் இருக்கும். இதனால், இணைய சேவை பயன்படுத்துவதில் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் .
இதே நகர்ப்புறங்களில் எடுத்துக்கொண்டால், அங்கு பைபர் கேபிள்கள் மூலமாக மக்கள் அதிவேக இணைய சேவையை பெற்று வருகிறார்கள். கிராமப்புறங்களோடு ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிகமாக அதாவது 100 மெகாபைட்ஸ் என்ற வேகத்தில் இணைய சேவை கிடைக்கிறது. இந்த நிலையில் தான் நகர்ப்புறத்தில் உள்ளது போன்றே, கிராமப்புறங்களிலும் 100 மெகாபைட்ஸ் வேகத்தில் இணைய சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதனை பாரத் நெட் மூலம் வழங்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு, முதற்கட்டமாக சுமார் 950 கிராமங்களில் பைபர்கேபிள்கள் அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ளது. தற்போது இந்த கிராமங்களில் தனியார் ஆபரேட்டர்களின் உதவியோடு இணையதள சேவையினை வழங்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. குறிப்பாக வரும் மார்ச் மாதம் இந்த 950 கிராமங்களில் மிக அதிவேக இணையதள வசதியினை பெறமுடியும்.
இந்த சேவைகளுக்கு குறிப்பிட்ட அளவு என்று கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு மிக குறைந்த கட்டணத்தை தான் தமிழக அரசு வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக மாதக்கட்டணம் 150 அல்லது அதற்கு குறைவாகத் தான் இருக்குமாம். எனவே தமிழக அரசின் இந்த சேவை மக்களுக்கு கிடைக்கும் பட்சத்தில், மாணவ மாணவிகள், வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள், ஆன்லைனில் படம் பார்ப்பவர்களுக்கு இணையதளம் ஒரு தடையாக இருக்காது. மிக வேகமாக இணையதள சேவை இருக்கும் என்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Post