ரஷ்யா: புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசியை வரும் 2025 ஆம் ஆண்டு தனது நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்க இருக்கிறது ரஷ்யா என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு காலகட்டத்தில் புற்றுநோய் என்பது ஒரு அரிய நோயாகவே மருத்துவ உலகிலிருந்துவந்தது. ஆனால், இன்றைக்குப் பலவகையான புற்றுகள் பெருகிவிட்டன. ஆரம்பக் கட்டத்திலேயே அதனைக் கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதில் சோகம் என்னவென்றால், பலருக்கும் அந்த நோய் முற்றும் வரை பெரிய அளவில் உடலில் மாற்றங்கள் தெரிவதில்லை. எனவே முதற்கட்டத்தின் போதே சிகிச்சைக்குச் செல்பவர்கள் மிகக் குறைவான அளவிலேயே உள்ளனர்.
இந்நிலையில்தான் ரஷ்யா புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்து அதனை வரும் 2025 ஆண்டு முதல் சந்தையில் விற்பனை செய்ய இருக்கிறது என்ற இனிப்பான செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தத் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் போது ரஷ்ய மக்கள் அனைவருக்கும் இலவசமாகச் செலுத்தப்படும் என்றும் என்று கிடைத்துள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நோயாளிகளின் புற்றுக் கட்டியிலிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளை சேகரித்து இந்த தடுப்பூசியை ரஷ்யா தயாரித்துள்ளது. ஒரு மாநிலத்தில் உள்ள மக்களுக்கு இலவசமாக ஒரு டோஸ் ஊசியைப் போட மட்டும் சுமார் 300,000 ரூபிள் செலவாகும் என ரஷ்யாவின் சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஆண்ட்ரி கப்ரின் தெரிவித்துள்ளார். அவர் இதைப் பற்றி குறிப்பிடுகையில், "இந்தத் தடுப்பூசி புற்றுக் கட்டி உருவாவதைத் தடுப்பதற்குப் பதிலாகப் புற்றுநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும் விளக்கி இருக்கிறார்.
இந்தத் தடுப்பூசியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் நல்ல வாய்ப்பாக நினைத்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். உண்மையில் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதால் புற்றுநோயிலிருந்து தப்பி விடலமா? அது குறித்து புற்றுநோய் சிறப்பு நிபுணர் டாக்டர் சுந்தரேசன், "இந்தத் தடுப்பூசி இன்னும் ஆராய்ச்சிக்கான முழு நிலையை அடையவில்லை. இது ஒரு எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிதான்.. இந்த ஊசியை உடம்பில் போட்டுக் கொண்டால், அதில் உள்ள வேதிப் பொருட்கள் நம் உடலில் புற்றுநோய் வந்தால் அதை எதிர்க்க வேண்டும் என்ற எதிர்ப்புச் சக்தியைத் தூண்டிவிடும்.
எனவே இந்த ஊசி என்ன மாதிரியான எதிர்ப்புச் சக்தியை உடம்பில் உண்டாக்கும். நம் செல்களுக்கு செல்லிக் கொடுக்கும் என்பதற்காக விவரங்களை இன்னும் ரஷ்யா வெளியிடவில்லை. மேலும் எத்தனை வகையான புற்றுநோய்களை இது எதிர்க்கும் என்ற விவரமும் இன்னும் வெளிப்படையாக ரஷ்யா அறிவிக்கவில்லை. இந்த எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி ஆராய்ச்சி முழுமை அடைந்தால் புற்றுநோயைத் தடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பது உறுதி" என்று கூறியுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவும் உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 635,000 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளன. பெருங்குடல் புற்றுநோய், மார்பகம் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் அதிக அளவில் ரஷ்யாவில் பதிவாகியுள்ளன. இதற்கு முன்பாக அமெரிக்காவில், புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மூளை புற்றுநோயின் ஒரு தீவிரமான வடிவமான கிளியோபிளாஸ்டோமா நோயாளிகளுக்கு ஒரு தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசியைப் பரிசோதனை செய்திருந்தது. அந்தத் தடுப்பூசி சில நம்பிக்கையான முடிவுகளைத் தந்தது.
ஊசி போடப்பட்ட இரண்டு நாட்களில் வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை அடைந்தனர். அதற்கான தூண்டலை இந்தத் தடுப்பூசி அளித்திருந்தது. இப்போது அந்த ஆராய்ச்சியின் அடுத்த முன்னேற்றத்தை ரஷ்யா அடைந்துள்ளது. இதே போல் இங்கிலாந்து விஞ்ஞானிகள் புற்றுநோயைத் தடுக்க தடுப்பூசி தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.