200 வெல்வோம் என எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களை எச்சரிக்கிறேன்.. விஜய் ஆவேசம்

post-img

சென்னை: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து எச்சரிக்கை விடுப்பதாகவும், கூட்டணி கட்சியின் அழுத்தத்தால் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என பேசியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர்," அம்பேத்கரின் வாழ்க்கை குறித்த பயோகிராபி என்னை வெகுவாக பாதித்தது வெயிட்டிங் ஃபார் தி விசா என அதற்கு அம்பேத்கர் தலைப்பு வைத்திருந்தார்.

அதில் அவர் சந்தித்த பிரச்சனைகள் நெருக்கடிகள் குறித்து விவரித்து இருந்தார். அதில் ஒரு ஆறு சம்பவங்கள் அதில் இடம் பெற்று இருந்தது. அவரது வாழ்க்கை வரலாறு எனக்கு பாதிப்பை தந்தது. வெளிநாடுகளுக்குச் சென்று பட்டம் எல்லாம் வாங்கி வழக்கறிஞராக இந்தியாவுக்கு திரும்பிய போதும் அரசாங்க பொறுப்பில் இருந்த அவர் ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தார்.
அந்த கிராம மக்கள் அவரை ஒரு வண்டியில் அழைத்து வர வேண்டும் என நினைத்திருந்தனர். ஆனால் அந்த வண்டியை ஓட்டியவர் அம்பேத்கருக்கு சமமாக வண்டி ஓட்டி வர மறுத்து விட்டார். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் வாங்கிய ஒருவரை விட வண்டி ஓட்டுபவர் தன்னை உயர்ந்தவராக நினைக்கிறார். அதுதான் அந்த சமூக கொடுமை தான் அவரை சமத்துவத்துக்காக போராட வைத்தது. நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.
அந்த ஜனநாயகம் காக்கப்பட அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கு நியாயமான சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்காக தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என கூறவில்லை. அதே நேரத்தில் தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடக்கிறது என ஒவ்வொரு இந்தியனும் நம்ப வேண்டும் என தோன்றியது. அவ்வாறு நடக்க வேண்டுமென்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்துடன் நியமிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் அன்றுதான் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான ஜனநாயக உரிமைகள் பிறந்த தினம். அதனால் அந்த தேதியை இந்திய ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் இதனை இந்திய ஒன்றிய அரசிடம் முன்வைக்கிறேன்.
அம்பேத்கரை பேசும்போது சட்டம் ஒழுங்கு சமூக நீதியை பேசாமல் இருக்க முடியாது. இன்றைக்கும் மணிப்பூரில் நடப்பதை கண்டு கொள்ளாமல் மத்தியில் ஒரு ஆளும் அரசு இருக்கிறது. அந்த அரசுதான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் அரசுதான் அப்படி என்றால் இங்கு இருக்கும் அரசும் என்ன செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வேங்கை வயல் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு நடந்த கொடுமைக்காக இன்று வரை ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் இன்று வெட்கப்பட்டு தலை குனிந்து போவார்..
இங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் நடக்கும் பிரச்சனைகள் ஒன்றா இரண்டா. பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, ஏன் மனித உயிர்களுக்கு எதிராக இதையெல்லாம் நாம் பார்க்கிறோம். படிக்கிறோம். மற்றவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்கிறோம். இதற்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வு என்ன தெரியுமா? சாதாரணம்தான். நமது தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன் முழுமையாக முழுமையாக அளிக்கும் மக்களை உண்மையாகவே நேசிக்கும் நேசிக்கும் ஒரு நல்ல அரசு.

இங்கு தினமும் நடக்கும் பிரச்சனைகளுக்கு சம்பிரதாயத்திற்காக டிவீட் போடுவதும், சம்பிரதாயத்திற்காக அறிக்கையை விடுவதும், சம்பிரதாயத்திற்காக நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என காட்டிக் கொள்வதும், சம்பிரதாயத்திற்காக மழை தண்ணீரில் இன்று போட்டோ எடுத்துக் கொள்வதும்.. எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. ஆனால் என்ன செய்வது ஆனால் அதையெல்லாம் செய்ய வேண்டியதாகி விட்டது.
மக்கள் உரிமைகளை மதிக்கத் தெரியாத.. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்கள் சுய நலனுக்காக பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026 இல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்
கடைசியாக ஒரு விஷயம்.. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் அவர்களால் இன்று வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தம் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன்.. அவருடைய மனது முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்" என்றார்.

Related Post