சென்னை: அதிமுக மகளிர் அணி மாநில துணைச்செயலாளராக உள்ள அமுதா, சேலம் மாவட்டம், கடந்த செப்டம்பர் 22-ந் தேதி ஆத்தூரில் நடந்த அறிஞர் அண்ணா 116-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து மிகவும் அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் பேச்சு சுதந்திரம் இருப்பதற்காக எல்லை தாண்ட முடியாது என்றும் அதிமுக பெண் நிர்வாகிக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகமகளிர் அணி மாநில துணைச்செயலாளராக உள்ள அமுதா என்பவர் கடந்த செப்டம்பர் 22-ந் தேதி சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த அறிஞர் அண்ணா 116-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் அமுதா பேசும் போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக மகளிர் அணி மாநில துணைச்செயலாளர் அமுதா மீது அக்டோபர் 18-ந் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சேலம் ஆத்தூர் புறநகர் போலீசார் பல்வேறு சட்டப்பிரிவின் கீழ் அ.தி.மு.க. மகளிர் அணி மாநில துணைச்செயலாளர் அமுதா மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக மகளிர் அணி மாநில துணைச்செயலாளர் அமுதா மனு தாக்கல் செய்தார். அதில், எதிர்க்கட்சியினரின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் விதமாக இந்த வழக்கு போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவதூறாக பேசியதாக பொதுமக்கள் யாரும் என் மீது புகார் செய்யவில்லை. இந்த வழக்குகூட சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்த பின்னரே புகார் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சந்தோஷ், முதல்வர், அமைச்சர்கள், அரசு திட்டங்களை மிகவும் கேவலமாகவும், அசிங்கமாகவும் மனுதாரர் பேசியுள்ளார். அதனால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், முதல் தகவல் அறிக்கையை படித்தபோது மனுதாரர் மிகவும் அசிங்கமாக முதல்வர் உள்ளிட்டோரை பேசியுள்ளார். அவரது பேச்சை இந்த வழக்கில் எழுதக்கூட முடியவில்லை.
கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எல்லை தாண்டி ஒருவரை அவதூறாக பேச முடியாது. அண்மையில் கூட நடிகை (கஸ்தூரி) குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களை அவதூறாக பேசியதற்காக இந்த உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் அய்யப்பராஜ், மனுதாரர் அ.தி.மு.க., மாநில நிர்வாகி. அவர் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பிரமாண மனு தாக்கல் செய்வார் என்றார். இதனிடையே அவதூறு பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல், தான் பேசியதை நியாயப்படுத்தும் விதமாக பிரமாண மனுவை தாக்கல் செய்துள்ளார். இதை ஏற்க முடியாது. முழு மனதுடன அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அதனால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன்" இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கூறியுள்ளார்.