அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த விஜய பிரபாகரன்! கூடவே போன எல்.கே.சுதீஷ்! என்னவாம்?

post-img
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் விஜயபிரபாகரன் சந்தித்து பேசினார். அப்போது தனது தந்தையும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார். விஜய பிரபாகரனுடன் தேமுதிகவின் துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷும் இருந்தார். தேமுதிகவின் தலைவரும் தமிழக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் உடல்நல பாதிப்பால் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். இந்த நிலையில் அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு கட்சியினர் அனைவரும் வர வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். இந்த முதலாம் ஆண்டு விழாவில் பங்கேற்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் விஜய பிரபாகரன் சந்தித்தார். அப்போது விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷும் இருந்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். நினைவுத் தினத்தன்று ஒரு கிலோமீட்டர் தூரம் பேரணி நடத்த தேமுதிக திட்டமிட்டுள்ளது. விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக அறிவித்துள்ளதாக சுதீஷ் தெரிவித்திருந்தார். இந்த பேரணியில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, "முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் தேமுதிக கட்சி பொதுச் செயலாளர் எல்.கே. சுரேஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் நல்லதம்பி ஆகியோர் நேரில் சந்தித்தனர். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 28 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளதையடுத்து, அன்றைய தினம் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post