மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் (பட்னவிஸ்) இன்று பதவியேற்றார். மகாராஷ்டிரா துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோரும் இன்று பதவியேற்றனர். மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில் பிரதமர் மோடி, 19 மாநில முதல்வர்கள் உட்பட சுமார் 2,000 பேர் பங்கேற்றனர்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி. தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்களாகிவிட்ட நிலையில் இன்றுதான் புதிய ஆட்சி பதவியேற்றது.
மகாராஷ்டிரா ஆளுநரான சிபி ராதாகிருஷ்ணனை நேற்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆகியோர் சந்தித்தனர். அப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதங்களை ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோர் வழங்கினார்.
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 20 ஆண்டுகளாக தேவேந்திர பட்னாவிஸ் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக முகமாக உருவெடுத்து நிற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரைச் சேர்ந்தவர்தான் தேவேந்திர பட்னாவிஸ். மாடலிங் துறையில்தான் கால் பதித்தார் தேவேந்திர பட்னாவிஸ்.
பின்னர் 22 வயதில் கவுன்சிலராக அரசியல் பயணத்தை தொடங்கினார். இந்த அரசியல் பயணம் கிடுகிடுவென உச்சத்தை எட்டியது. 44 வயதில் மகாராஷ்டிராவின் முதல்வரானார் தேவேந்திர பட்னாவிஸ். மகாராஷ்டிராவில் சரத்பவாரைத் தொடர்ந்து இளம் வயதில் முதல்வரானவர் தேவேந்திர பட்னாவிஸ்தான். அவரது மனைவியும் மாடலிங் துறையைச் சேர்ந்தவர்தான். 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா முதல்வராக முழுமையாக 5 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்தவர் தேவேந்திர பட்னாவிஸ்.
2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தீவிர இந்துத்துவா கோட்பாடுகளுக்கு எதிரான காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்தது. அதற்கு முன்னதாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார் தேவேந்திர பட்னாவிஸ். ஆனால் முதல்வராக பதவியேற்ற வேகத்திலேயே பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ். அப்போது உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமைந்தது. ஆனால் இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆட்சியைக் கவிழ்த்து பாஜக புதிய அரசை அமைத்தது. அப்போது ஈகோ பார்க்காமல் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக, துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார் தேவேந்திர பட்னாவிஸ்.
மகாராஷ்டிராவில் பொதுவாக மராத்தா ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவர். மகாராஷ்டிராவில் மனோகர் ஜோஷியை தொடர்ந்து முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட 2-வது பிராமணர் தேவேந்திர பட்னாவிஸ்தான். தற்போதைய தேர்தலிலும் பிராமணர் என்பதாலேயே பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் பாஜக மேலிடமோ தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக 3-வது முறையாக இன்று பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்.
மும்பை ஆசாத் மைதானத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிராவின் முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி, 19 மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உட்பட சுமார் 2,000 பேர் பங்கேற்றனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage