"விஜய் சைலண்டா ஒரு வார்த்தை சொன்னாலே பயங்கரமா வெடிக்குதே.. பார்த்தீங்கள்ல.. தாடி பாலாஜி உற்சாகம்

post-img
சென்னை: “தலைவர் விஜய் அமைதியா தான் இருப்பாரு.. பேச வேண்டிய இடத்தில பேசுவாரு.. அவரு சைலண்டா ஒரு வார்த்தை சொன்னாலே பயங்கரமா வெடிக்குதே..” என தவெக நிர்வாகி தாடி பாலாஜி தெரிவித்திருந்தார். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கினார். கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்றது. அந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய்யின் பேச்சு அரசியல் அரங்கை பரபரப்பாக்கியது. அதைத்தொடர்ந்து, அண்மையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா மேடையில் பேசினார் விஜய். விஜய் கட்சியில் பல லட்சக்கணக்கானோர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த தாடி பாலாஜி, சின்னத்திரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் கவனம் ஈர்த்தார். அவர் விஜய் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து, தவெக கட்சியினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் தாடி பாலாஜி. இந்நிலையில், வடசென்னை மாவட்டம் தவெக சிறுபான்மையினர் பிரிவின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நடைபெற்றது. எண்ணூர் எர்ணாவூர் மேம்பாலம் அருகே தவெக நிர்வாகி சாமுவேல் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நடிகரும் தவெக நிர்வாகியுமான தாடி பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தாடி பாலாஜியிடம், அம்பேத்கர் பற்றி அமித் ஷா பேசியதற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தவெக அப்படி எதுவும் எதிர்ப்பை காட்டவில்லையே என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தாடி பாலாஜி, “தவெக தலைவர் விஜய் என்ன முடிவெடிக்கிறாரோ அதனை ஏற்று செயல்படுவோம். அம்பேத்கரை அவமரியாதையாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி தவெக தலைவர் விஜய் முடிவெடுக்கவில்லை. அவர் முடிவு எடுத்தால் நாங்கள் செய்வதற்கு தயாராக இருப்போம். அவர் சைலண்டா ஒரு விஷயம் சொன்னால் பயங்கரமாக வெடிக்கிறதே. விஜய் பேச வேண்டிய இடத்தில் கரெக்ட்டாக பேசுவார்.” என்றார். தவெகவில் நிர்வாகிகள் இடையே உட்கட்சி பிரச்சனைகள் ஏற்படுவது பற்றிப் பேசிய பாலாஜி, “தவெக கட்சித் தொண்டர்கள் தனித்தனியாக இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கைகள் இணைந்தால் வலுப்பெறுவது போல் தொண்டர்கள் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.” என்றார். மேலும் பேசிய தாடி பாலாஜி, “ஒருவர் வருகிறேன் வருகிறேன் எனச் சொல்லிட்டு வரமாட்டார். ஆனால் விஜய் வந்துவிட்டார், கொடியை அறிமுகப்படுத்தி விட்டார், மாநாடு நடத்திவிட்டார். அதன் பிறகு ஒவ்வொரு விஷயமாக செய்து வருகிறார். புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சை பார்த்திருப்பீர்கள். நடிகராக இருந்த விஜய் சினிமாவில் மறைமுகமாக பஞ்ச் டயலாக் பேசுவார், இப்போது அரசியலுக்கு வந்த பிறகு நேரடியாக பஞ்ச் டயலாக் பேசுகிறார். விஜய் கண்டிப்பாக மாற்றுத் தலைவராக இருப்பார். நான் பதவிக்காக வரவில்லை, என் உயிர் இருக்கும் வரை அவருக்காக உழைப்பேன். அதற்காகவே நெஞ்சில் அவரை பச்சை குத்தி வைத்துள்ளேன். மற்ற நடிகர்கள் எப்படி என்று தெரியவில்லை? நான் துணிந்து வந்துவிட்டேன். எனக்கு விஜய் அதிகமான உதவி செய்திருக்கிறார். நன்றி விசுவாசம், அதை தாண்டி விஜய் வந்தா மக்களுக்கு நிறைய நல்ல விஷயம் செய்வார்” எனத் தெரிவித்துள்ளார். அண்மையில், தனது நெஞ்சில் விஜய்யின் உருவத்தை டாட்டூவாக குத்திக் கொண்டார் தாடி பாலாஜி. 7 மணி நேரமாக இந்த டாட்டூவை போட்டுக் கொண்டுள்ளார் தாடி பாலாஜி. சட்டையில் விஜய் உருவத்தை பலர் டிசைன் செய்துள்ளனர். சும்மா சட்டையில் போட்டு கழட்டிட்டு வேற சட்டை போட்டுக்கறதுக்கு பதிலா வித்தியாசமா இருக்கணும்னு நான் நெனச்சேன். அவர் எப்போதும் எனது இதயத்தோடு நெருங்கி இருக்கணும்னு நினைக்கிறேன், அதனால் தான் நெஞ்சில் குத்தி இருக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

Related Post