சென்னை: 1998-ம் ஆண்டு 58 பேரை பலி கொண்ட கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான தடை செய்யப்பட்ட அல் உம்மா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பாட்ஷா நேற்று காலமானார். அல் உம்மா பாட்ஷாவின் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் 'கண்ணீர் வணக்க'த்துடன் இரங்கல் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட இரங்கல் செய்தி: கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகச் சிறைக்கொட்டடியில் வாடிய சிறைவாசி அப்பா பாட்சா அவர்களது மரணச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், இசுலாமியச் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அநீதி இழைக்கப்படுவது தெரிந்தும் அப்பாவை மீட்க இயலாத அதிகாரமற்ற கையறு நிலை பெரும் மனவலியையும், குற்ற உணர்ச்சியையும் தருகிறது. விடுதலை எனும் மகத்தான உரிமையைப் பெற துடித்த அப்பா பாட்சா அவர்கள் மொத்தமாக நம்மிடமிருந்தே பிரிந்து விடுதலையை அடைந்திருப்பது சொற்களால் விவரிக்க இயலாத பெருங்கொடுமையாகும். கோவை சிறையில் அவரோடு இருந்ததும், சிறைவிடுப்பில் வெளிவந்தபோது அவரோடு உரையாடியதும் நெஞ்சில் நிழலாடுகின்றன.
"வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருக்கக் காரணங்களைத் தேடுபவன் கொடுமையாளன்" என்கிறார் போற்றுதற்குரிய பெருமகனார் நபிகள் நாயகம் அவர்கள். இசுலாமிய சிறைவாசிகளை விடுவிப்போமென வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் ஆதிநாதன் குழு அமைத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டதெனக் கருதி ஒதுங்கியது நம்பி நின்ற இசுலாமியச் சொந்தங்களை ஏமாற்றிய கொடும் வஞ்சகச் செயலாகும்.
விடுதலையை அனுபவிக்காமலேயே அபுதாகீர், அப்துல் ஹக்கீம் ஆகிய சிறைவாசிகள் திமுகவின் ஆட்சிக்காலத்தில் உயிரிழந்த நிலையில், அவர்களைத் தொடர்ந்து அப்பா பாட்சா அவர்களும் தற்போது உயிரிழந்திருப்பது கொடுந்துயரத்தைத் தருகிறது. தனது கடைசிக்காலத்திலாவது விடுதலைபெற்று குடும்பத்தினருடன் மனஅமைதியாக வாழ வேண்டுமென விரும்பிய அவரது ஏக்கமும், விருப்பமும் கடைசிவரை நிறைவேறாமலே போய்விட்டதென்பது பெரும் ரணத்தைத் தருகிறது.
இசுலாமிய மக்களின் வாக்குகளை மொத்தமாகப் பெற்று ஆட்சியதிகாரத்திற்கு வந்த திமுக, அவர்களின் நெடுநாள் கோரிக்கையான இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கு எந்த முன்நகர்வையும் செய்யாது காலங்கடத்துவதும், சட்டப்போராட்டம் நடத்தி விடுதலைபெற விரும்பும் சிறைவாசிகளின் முயற்சிகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் முட்டுக்கட்டை போடுவதும் பச்சைத்துரோகம் இல்லையா? இசுலாமிய சிறைவாசிகளை மரணத்தின் மூலம்தான் விடுதலைசெய்வதாக முடிவு செய்துவிட்டதா திமுக அரசு? இன்னும் எத்தனைக் காலத்துக்கு ஆளுநரைக் காரணம்காட்டித் தப்பிப்பீர்கள் பெருமக்களே? உங்கள் பொறுப்பையும், கடமையையும் தட்டிக்கழித்து, இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையை வைத்து மலிவான அரசியல் செய்யலாமா? வெட்கக்கேடு!
இசுலாமிய சிறைவாசிகளை விடுதலைசெய்வோமென அளித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அரசியல் நாடகமாடுவதும், வாக்கரசியல் ஆதாயம் தேட முற்படுவதும் ஏற்கவே இயலா கொடுங்கோன்மையாகும். அப்பா பாட்சா அவர்களது மரணமே இறுதியாக இருக்கட்டும். இனி எந்தவொரு சிறைவாசியும் விடுதலைபெறாது மரணத்தைத் தழுவக்கூடாது. தனது வாழ்நாளையே சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தொலைத்திட்ட இசுலாமிய சிறைவாசிகள் எஞ்சிய காலத்தையாவது குடும்பத்தினருடனும், உறவுகளுடனும் கழிக்கட்டும்.
இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையை விரைவாக சாத்தியப்படுத்த தொடர்ந்து உழைப்பதே அப்பா பாட்சா அவர்களுக்கு நாம் செலுத்தும் இறுதி மரியாதையாக இருக்கும். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.